கிளிநொச்சி மாவட்ட செயலக 73வது சுதந்திர தின நிகழ்வு.

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வு

இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 73வது சுதந்திர தின நிகழ்வானது இலங்கை முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மாவட்ட செயலக 73வது சுதந்திர தின நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள், நீண்டகாலத்திற்கு பின் ஒரு மாவட்டத்தின் சுதந்திர தின நிகழ்வில் தனக்கு பங்குகொள்ள சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

 பல சவால்களுக்கு மத்தியில் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாம், மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ அவர்களின் வடமாகாண மக்களின் வாழ்வியலை முன்னேற்ற வேண்டுமென்ற அவாவினை முன்நிறுத்தி அவர்களின் தேவைகளை கருத்திற் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சுதந்திரம் என்பது முக்கியமாக இரு விடயங்களில் காணப்படுவதாக தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள், ஒரு மனிதனுக்கு செய்யக்கூடாத விடயங்களை செய்வதும் செய்யப்பட வேண்டிய விடயங்களை செய்யாமல் விடுவதுமே ஆகும் எனவும் தெரிவித்தார்.

இதில் ஒரு மனிதனுக்கு செய்யப்பட வேண்டிய பல விடயங்கள் செய்யப்படாது மறந்துபோகும் தருணங்களே அதிகமென சுட்டிக்காட்டிய கௌரவ ஆளுநர் அவர்கள் மக்களுக்கு கிடைக்கவேண்டிய ஆனால் சந்தர்ப்பம் மறுக்கப்படும் விடயங்களில் தடைகளை தகர்த்து மக்களின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்லவேண்டிய கடமைப்பாட்டில் அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் மிகக் கவனமாக செயற்படவேண்டும்.

எனவே நாம் காலனித்துவ ஆட்சியில் பெற்ற சுதந்திரம் தனியே அரசியல் சுதந்திரம் மட்டுமன்றி இம் மக்களுக்கு வளங்கபடவேண்டிய வாழ்வியல் சுதந்திரம் என்பதை அனைவரும் கருத்திற் கொண்டு அதனை வழங்கும் முக்கிய நிறுவனமாக திகழும் மாவட்ட செயலகம் அதனோடு இணைந்த பிரதேச செயலகம் மற்றும் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென தெரிவித்தார். அத்தோடு பாரிய சவால்களுக்கு உட்பட்டுள்ள போதைவஸ்து பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் சுதந்திரமாக வாழமுடியாத சூழ்நிலையிலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கை வாழவேண்டும் என்ற மேன்மை தங்கிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும், “சுபீட்சத்தின் நோக்கு” என்ற மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் கொள்கை செயற்திட்டங்களுக்கு அமைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமிக்கப்பட்டு பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வடமாகாண மக்களின் பாரிய பிரச்சனையாக உள்ள குடிநீர் பிரச்சனைக்காக தீர்வுகள் தற்போது எடுக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே இச் செயற்த்திட்டங்களை சரியாக மக்களை நோக்கி முன்னகர்த்தி செல்லும் பாரிய பொறுப்பை கொண்டுள்ள அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அவற்றை செவ்வனே செய்யவேண்டும். அதற்காக வடமாகாணத்திலேயே அரச சேவையில் அதிக கால சேவை அனுபவமுள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என கூறியதோடு அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்களையும் தெரிவித்து விடைபெற்றார்.

Leave A Reply

Your email address will not be published.