முல்லைத்தீவு மாவட்ட சுதந்திர தின நிகழ்வு கூழாமுறிப்புக் குளக்கரையில் இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட சுதந்திர தின நிகழ்வு!
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திரதினத்தையொட்டி முல்லைத்தீவு மாவட்ட சுதந்திர தின நிகழ்வு கூழாமுறிப்புக் குளக்கரையில் இன்று(04) காலை 9.30மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகம், ஒட்டிசுட்டான் பிரதேச செயலகம், முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்களம், ஒட்டிசுட்டான் கமநல சேவை நிலையம் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற மாவட்ட சுதந்திர தின நிகழ்வில் தேசியக்கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பசுமையான நாட்டினை கட்டியெழுப்பம் வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.
தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரையினை தர்மபணிதாராம விகாரை விகாராதிபதி வண.சுஜுவலங்காதேரர், கச்சிடமடு சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு வண.கர்ணானந்தன், முத்தையன் கட்டுமௌலாவி வண.கே.எம்.பி மொஜிதீன், குழாமுறிப்பு பங்குத்தந்தை வண.பத்திநாதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக சுகாதார விதிமுறைகளுக்கமைய சுதந்திர தின நிகழ்வுகள் எளிமையான முறையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், ஒட்டிசுட்டான் இராணுவ தலைமையக பொறுப்பதிகாரி மேஜர் ஜெனரல் கருணானந்த மற்றும் இராணுவ அதிகாரிகள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஒட்டிசுட்டான் பிரதேச செயலாளர், ஒட்டிசுட்டான் பொலிஸ் நிலைய இரண்டாம் நிலை பொறுப்பதிகாரி ஐ.கே கருணாரத்ன, முல்லைத்தீவு கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், ஒட்டிசுட்டான் கமநல சேவை நிலைய பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர், கமக்கார அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டனர்.