தேசிய பாரம்பரியத்தை தீர்மானித்தல் மற்றும் அடையாளம் காண்பது தொடர்பான இடைக்கால அறிக்கை.
இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானித்தல் மற்றும் அடையாளம் காண்பது தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு
இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும் அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான இடைக்கால அறிக்கை அக்குழுவின் உறுப்பினர்களினால் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் (2021.02.03) கையளிக்கப்பட்டது.
குறித்த இடைக்கால அறிக்கைக்கு அமைய முன்வைக்கப்படும் முன்மொழியப்பட்ட வழிமுறைகள் பொதுமக்களின் கருத்து கோரலுக்காக எதிர்வரும் 8ஆம் திகதி நாளிதழ்களில் பகிரங்கமாக வெளியிடப்படவுள்ளது.
தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க அவர்களின் கோரிக்கைக்கு அமைய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும் அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதலை பெற்றுக்கொண்டார்.
அதற்கமைய தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும், அடையாளம் காணவும் உரிய வழிமுறையை தயாரிப்பதற்கு 16 நிபுணர்களைக் கொண்ட ஒரு நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவானது பேராசிரியர் இந்துருகாரே தம்மரதன தேரர், பேராசிரியர் மாலனி அதகம, பேராசிரியர் ரோஹண பீ மஹாலியனஆராச்சி, சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, பேராசிரியர் யசாஞ்சலி ஜயதிலக, பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, கலாநிதி மங்கள கடுகம்பல, கலாநிதி ஜானகி ஜயவர்தன, கலாநிதி டீ.சனாதனன், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம்.யசீர், நாட்டுபுறவியல் விமர்சகர் மஹிந்த குமார தளுபொத, தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர், தொல்பொருள் ஆய்வாளர், தேசிய காப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் துறைகளின் பணிப்பாளர் நாயகம் மற்றும் கலாசார திணைக்கள பணிப்பாளர்கள் ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
குறித்த இடைக்கால அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் தேசிய மரபுரிமை அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.