ஒரு முறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் மீண்டும் கொரோனா தாக்கும் அபாயம்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவாகும். இந்த நோய் எதிர்ப்பு பொருள், நாளாவட்டத்தில் குறைகிறபோது, மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஆராய்ச்சி பற்றி அவர்கள் கூறுகையில், “40 வயதில் ஒரு நபர் கடந்த ஏப்ரல் மாதம் கடுமையான கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனால் அதே நபர் 4 மாதங்களுக்கு பிறகு லேசான கொரோனா தொற்றுடன் மீண்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டைப்-2 நீரிழிவு இருக்கிறது. உடல் பருமன் ஆனவர். தைராய்டு சுரப்பி சரியாக இயங்கவில்லை. இதெல்லாம் கொரோனாவின் தீவிர தாக்குதலுக்கு காரணிகள் ஆகும்” என்று சொல்கிறார்கள். முதலில் அவர் சுவாச கோளாறுகளுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, கடுமையான மூச்சிரைப்புக்கு ஆளாகி உள்ளார். அவரை வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர்.
ஆனால் அதே நபர், ஆகஸ்டு மாதம் மறுபடியும் கொரோனா தொற்று தாக்கி, அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் 3 முறை சோதித்ததில் கொரோனா தொற்று இல்லை. இரண்டாவது முறை அவர் தொற்றால் பாதிக்கப்பட்டபோது ஒரு நாள் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியது ஏற்பட்டதாம். ஆனால் 2 வாரங்களுக்கு பின்னர் அவர் இடைவிடாத மூச்சு திணறலால் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “கொரோனா முதல் முறை தாக்கி தப்பி பிழைத்தவர்களுக்கு, ஆரம்ப நோய் தொற்றுக்கு பிறகு நோய் எதிர்ப்பு பொருள் குறைவது அல்லது இல்லாமல்போவது, மறுபடியும் தொற்று ஏற்பட வழி வகுக்க வாய்ப்பு உள்ளது. இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டால் இது தொடர்பான கூடுதல் உண்மைகள் வெளிவரும்” என்கிறார்கள்.