கண்மணியே பேசு! – கோதை 

 

பாகம் 11

 

எல்லாமே சரியாக நடக்க வேண்டும்  என்ற பதட்டம் கண்மணிக்கு உடம்பில் வியர்வையைத் தோற்றுவித்திருந்தது. எப்படியாவது வீட்டிலிருந்து புறப்பட்டு அவளுடைய தோழி மரியா வீட்டுக்குப் போய் விடவேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. எப்போது தன் நிர்வாணம் கண்காட்சியாகக் கணணிக்குப் போனதோ அந்த நிமிடமே அவள் அந்த வீட்டில் அந்நியமாகிப் போனதான உணர்விலும் அவமானத்திலும் கோபத்திலும்  குறுகிப் போனாள்.

அவளுக்கு அந்தப் படங்களுடன் இருந்த வேறு சில படங்களும் பல புதிர்களுக்கு விடை கூறிய அதிர்ச்சி அவளை விட்டு இன்னும் போகவில்லை. பலவிதமான உணர்வுகளின் கலவையில்க் குளித்தது போன்ற தோற்றத்துடன் அவசர அவசரமாக குளிருக்குத் தேவையான உடைகளை அணிந்து, கதவை இழுத்துச் சாத்தினாள் கண்மணி.  வீட்டுக்கு வெளியே, வீதியெங்கும் அவள் விரும்பிய அமைதி காற்றோடு போர்த்தியிருந்தது.  நடந்தே செல்வதென்ற தீர்மானத்தில் குளிராடையின் மேற்புறத்தால் தலையைப் போர்த்தினாள். யாரும் தன்னைப் பார்த்துவிடக் கூடாது என்ற நினைவில் நடையின் வேகம் அதிகரித்து, அவளை அவள் தோழி மரியாவீட்டுக்கு தள்ளிச் சென்றது.

 

இருபத்தியைந்து நிமிடத்துக்குள் அவளது மனத்தில் ஆயிரம் கேள்விகளும் விடைகளுமாக புயல் ஒன்றின் ஆக்ரோஷத்தோடு அவளது கடந்த காலம் அவளை அடித்துப் போட்டிருந்தது. கதவைத்  தட்ட முன்னரேயே அவளை எதிர்பார்த்திருந்த  படபடப்போடு மரியா கதவைத் திறந்தாள்.

“உன்னைப் பார்த்துக் கொண்டிருந்து களைச்சே போனன், ஏன் லேட்டானது? என்ன குடிக்கிறாய்? சாப்பிட்டியா?”  பல்வேறு கேள்விகளையும் ஒரே நேரத்தில் மரியா கேட்டதற்கு அவளது கரிசனையும், அன்பும், நட்பும் தான் காரணம் என்பது தெரியாதவள் அல்ல கண்மணி!

“எனக்கு குடிக்கத் தண்ணி இருந்தால் போதும்!” கண்மணிக்கு அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது.

 

“என்ன தண்ணி வேணும் உனக்கு? விஸ்கி, பிரெண்டி, வைன் என்று கண்மணியைச் சிரிப்புக் காட்டவென்று  வம்புக்கு  இழுத்தவளை கண்மணி சிரிப்பில்லாமல்ப் பார்த்தாள்.

மரியா அதன் பின் எதுவும் பேசாமல் அவள் கேட்டது போலவே ஒரு குவளை நீரைக் கொண்டு வந்து நீட்டினாள்.

ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டு, கண்ணீரோடு மரியாவைப் பார்த்தவள் நேரம் போய்விட முன்பு சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய அவசரத்தோடு மனதிலிருந்ததைக் கொட்டத் தொடங்கினாள்.

 

“மரியா, சேரனுக்கு இப்ப பலமாக இருப்பது ஒரு வைத்தியர் எண்டது தான்   நம்ப முடியாமல் இருக்கு, அதுவும் ஊர் அறிஞ்ச கள்ள வைத்தியர்.  பொது மக்களின்ர காசை, பதுக்கினவர் எண்டு என்ர சிநேகிதி ஒருத்தி சொல்லி,  எனக்கு அவரைக் காட்டியும் எனக்கு நம்ப முடியேல்ல, ஆனால் இப்ப நடக்கிற விசயங்கள் எல்லாம் ஒரு மாதிரியாய்த் தான் போய்க்கொண்டிருக்கு.”  கண்மணி சொல்வதை எதுவும் சொல்லாமல் மரியா கேட்கத் தொடங்கினாள்.

“அது ஒரு பக்கம் எண்டால், அவரோட சேர்ந்த கூட்டமும் அப்பிடியாய் எல்லோ இருக்கு. அவரிண்ட கூட்டாளி, ஒரு நாதாரிப் பயல் ஒருத்தன், அநியாயத்துக்கு அவன் ஒரு  வித்துவானாம், அவனுக்கு தென்னை மரத்துக்கு சீலை கட்டி விட்டாலும், பின்னாலை ஓடுற புத்தியோட சுத்துறான்.  அவன் இங்கயிருந்து, தான் காசு அனுப்பி உதவி செய்த ஒரு பிள்ளையைப் பார்க்க இங்கயிருந்து போனவன், அங்க இருந்து அந்தப் பிள்ளையை பக்கத்தில இருந்து கட்டிபிடிக்காத குறையாய் ஒரு படம் சேரனுக்கும் அனுப்பியிருந்தான்.  அதில அந்தக் கழுதைக்கு ஒரு அற்ப சந்தோசம்.  அவனை அந்தப் பிள்ளை தன்னை வளர்த்த அப்பாவாய் நினைச்சுப் பார்க்கப் போயிருக்கும் போல! அவனுக்கு அந்தப் பிள்ளையின்ர வயசில மகளும் ஒண்டு இருக்கு.” கண்மணிக்கு மூச்சிறைத்தது.

“நீ எப்ப அந்த படத்தைப் பார்த்தாய்?” வியப்புடன் கேட்டால் மரியா.

“எல்லாக் கோதாரியும் ஒண்டாய்த் தான் இருந்தது, இதைப் பார்த்துக்கொள்,” என்றபடி கண்மணி ஒரு படத்தின் பிரதியைக் காட்டினாள். அதில்  சின்னப்பெண் ஒன்று அப்பாவியாய்,  தன் அப்பா வயதுள்ள ஒரு வழுக்கைத் தலையனுடன்  பக்கத்தில் இருந்து ஐஸ்கிறீம் குடித்தபடி சிரித்துக் கொண்டிருந்தது.

 

“மரியா இதையும் பார்,” என்றவாறே கண்மணி இன்னும் சில படங்களையும் பிரதிகளையும் முன் வைத்தாள்.

அவற்றில் பல விதமான பெண்களும் சேரனும் நின்றபடி படங்கள், எதுவும் அசிங்கமானதாய் இல்லாவிட்டாலும் கூட அவை யாவும் அவள் இப்போது சேரனோடு இருக்கும் வீட்டில் எடுக்கப்பட்டவை என்பதில் அவளுக்கு நிறையவே மனத்தாங்கல் இருந்தது.  இவ்வளவு பழகி அவளைக் காதலித்து மணந்து கொண்டவன், தன்னைப் பற்றி எதுவும் தெரியாதவாறு நிறைய விடயங்களை மறைத்தது போல ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டிருந்தது.  அதிலும் பலபடி கூடுதலாக,  அவன் வாழ்வில் வந்து போன பெண்களின்  நிர்வாணப் புகைப்படங்களும் காணொளிகளும் மனத்தைக் குத்திக் கிழிக்க அவள் மரியாவை நிமிர்ந்து பார்த்தாள்.

 

அந்தப் பார்வையில் ஒரு குழந்தை ஒன்றின் ஏக்கமும் தன் பாதுகாப்பு குறித்த அச்சமும் நிறைந்திருந்தது.  மரியா கண்மணியைப் பேச விட்டபின் அவளுக்கு மேலும் தன் கருத்துக்களைக் கூறவோ, தனது கணிப்புகளை திணிக்கவோ செய்யாமல்  அல்லது கண்மணி செய்தது தவறு என்று சொல்வதையெல்லாம் தவிர்த்து ஒரு தாயின் சிரத்தையோடு அவள் தலையை வருடிக் கொடுத்தாள்.

 

“கண்மணி, இனி நீ கவனமாய் இருக்க வேணும், முதலில நீ உன்ர குழந்தைகள் இருக்கிற வீட்டுக்குப் போயிடு. நீ இரண்டு வீட்டிலையும் இருக்கிறது வழமை எண்டபடியால சந்தேகம் வர முதலே உனக்குத் தேவையானதை முடிஞ்ச வரையில எடுத்துக் கொண்டு போறது நல்லது!” மரியா வார்த்தைகளை அளந்து நிதானமாக, அதே வேளை கண்டிப்புடன் வார்தைகளாக்கினாள்.

 

“நான் என்ர பிள்ளைகளுக்கு என்ன பதிலைச் சொல்லுவன்?” என்று தொடங்கிய கண்மணியை ஆசுவாசப்படுத்தி, அவளைத் தானே தன்னுடைய காரில் சேரனின்  வீட்டுக்கு முதலில் அழைத்துச் சென்று, அவளுடைய உடமைகளுடன் அவளைத் திரும்பவும் அவளுடைய குழந்தைகளுடன் விட்டு விட்டு தன் வீடு திரும்பினாள் மரியா. மேற்கத்தேய நாட்டில் பிறந்து வளர்ந்த குழந்தைகள், எதையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டு, தாயை அரவணைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்  தான் மரியா இருந்தாள்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

 

வழி வழியே அவளுக்கு ஆறுதலும் தைரியமும் கொடுத்து, தன்னை எப்போதும் அழைத்துக் கொள்ளலாம் என நம்பிக்கையும் கொடுத்துத்தான் கண்மணியை இறக்கி விட்டிருந்தாள்.

மரியாவுக்கு கண்மணி குறித்த ஆதங்கங்கள், அவள் வாழ்வு குறித்த கவலைகளுடன்,  அவளுக்காக  சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய பல விடயங்களும் தலையைக் குடைய அவள் அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் தயாரானாள்.

இன்று காலையிலும் அவள் கண்மணியுடன் தொலை பேசியபோது  மேற்கொண்டு அவள் என்ன செய்யப் போகிறாள் என்ற கேள்வியை எழுப்பியிருந்தாள்.  கண்மணியிடமிருந்து விசும்பல் ஒலியும், முணுமுணுப்புகளுமே வந்து கொண்டிருந்தன.  சில வசனங்களை அவள் திரும்பத் திரும்ப ஒரு தீய்ந்து போன இசைக்கருவி போல,  மரியா தொலை பேசிய போதெல்லாம் கூறிக்கொண்டிருந்தாள்.  அவை இன்னும் மரியாவின் காதுகளில் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தன.

“அநியாயமாக என்ர பேரைக் கெடுத்துக் கொண்டன்!”

 

“எனக்கு  depression இருப்பதாக சேரன்  கதை கட்டி விட்டதும் ஏன் எண்டு தெரியேல்ல!”

 

“அவசரப்பட்டு முடிவெடுத்தது பிழை தான்!”

 

தம்மை விட,  தமது தனிப்பட்ட சவால்களையும் துயரங்களையும்  விட மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற நினைவில் தம்மை அழித்துக் கொள்ளும் இப்பெண்களை எப்படி இப்படியான சேரன்களிடம் இருந்து காப்பாற்றுவது என்பது மிகப் பெரிய சவால் தான்  என மரியாவின் மனம் ஆதங்கப்பட்டது.

இவர்களுக்கு  தம்மைக் காப்பாற்ற முன்னரே தம்மைத் துன்புறுத்தியவர்களையும் சேர்த்தே காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்படியுண்டாகிறது என்பதற்கு ஏதாவது மனோதத்துவ ரீதியான காரணங்கள் நிச்சயமாக இருக்கும் என்பதை மரியாவின் மனம் திடமாக நம்பியது.  ஒருவர் மீது வைத்த அன்பு, நம்பிக்கை, விசுவாசம் எனப்பல பெயர்களை இட்டு குடும்ப வன்முறைகளை ஏற்றுக் கொண்டு அத்தனை வலிகளையும் ஏன் தாங்குகிறார்கள் என்பதற்கு இப்பெண்கள் வளர்ந்த குடும்பப் பின்னணியும் பொருளாதாரமும் காரணங்களாக இருந்த காலப்பகுதி போய்,  பல தசாப்தங்கள் கடந்தும் இன்னும் நடைமுறையில் அந்த வைராக்கியம் மீண்டு வரவில்லை என்றே தோன்றியது. கண்மணியின் துயரங்கள்  தொடர்ந்து  இன்னொரு பெண்ணுக்கும்  கடத்திச் செல்லப் படக்கூடாதெனின் அவள் தனக்கான வாழ்க்கைப் பாதையை சரியான முறையில் எடுத்துச் செல்லத் தேவையானவற்றை நடத்தும் துணிவு அவளுக்கு வேண்டும்.  அவளுடைய குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் அவள் ஒரு முன்மாதிரியான தாயாய் வாழ்ந்து காட்ட வேண்டும்.

கண்மணியிடமும் சில குறைகள் இருந்திருக்கலாம், குற்றமிழைக்கா மனிதர்கள் இவ்வுலகில் இல்லையே?

மரியாவின் கேள்விகளுக்கு கண்மணியின் பதில் தான் என்ன? மௌனம் தானா?

 

Leave A Reply

Your email address will not be published.