இலங்கை எடுத்த முடிவு குறித்து ஜப்பான் நேரடியாக கவலை வௌியிட்டுள்ளது
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எடுத்த தீர்மானம் வருத்தமளிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
கொழும்பிலுள்ள ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா, வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்து இதனைத் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் ”தி ஹிந்து” பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.
வலயத்தில் சீனாவின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக கிழக்கு முனையத்தில் ஜப்பானும் இந்தியாவும் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்திருந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் 1.1 ட்ரில்லியன் யென் கடன் மற்றும் 300 பில்லியன் யென்னுக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் உதவிகளையும் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் மீள் ஏற்றுமதிகளில் 70 வீதம் இந்தியாவால் முன்னெடுக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டிலும் கிழக்கு முனையத்திற்கு பதிலாக மேற்கு முனையம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதனை அப்போது இந்தியா நிராகரித்ததாகவும் இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகரான ஒஸ்டின் பெர்னாண்டோவை மேற்கோள் காட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.