வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களை மாற்ற நடவடிக்கை.
வடமாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள விவசாய திணைக்களம், கால்நடை உற்பத்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் உள்ள காணி திணைக்களம் ஆகியவற்றை மாங்குளம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நகர்த்த வமாகாண ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் என வடக்கின் அனைத்து மாவட்ட மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆளுநர் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, விவசாய அமைச்சின்கீழ் வரும் விவசாயத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் என்பவற்றை மாங்குளம் பகுதிக்கு இடமாற்ற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்மூலம், அதிகளவு விவசாய மற்றும் கால்நடை உற்பத்தி நடைபெறும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட மக்கள் அதிக பயனடையக்கூடியதாக இருக்கும் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மாகாண காணி ஆணையாளர் திணைக்களம் கிளிநொச்சிக்கு இடமாற்றப்
படவிருப்பதாகவும், , அதிகளவு காணி தொடர்பான பிணக்குகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலேயே காணப்படுவதால், அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வசதியாக இந்த முடிவு எட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட காலம் முதல் அதன்கீழ் வரும் அனைத்து அமைச்சுக்களும், திணைக்களங்களும் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே செயற்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக , வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மாகாணசபை மூலமான தேவைகளை நிறைவேற்ற யாழ்ப்பாணத்துக்கே வரவேண்டியிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது ஆளுநர் சார்ள்ஸ் எடுத்திருக்கும் முடிவின்படி, வடக்கின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் மாகாணசபை நிர்வாகத்தை சம அளவில்
பயன்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
இதேவேளை வடக்கு மாகாணசபை, வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் மையமாக விளங்கும்,மாங்குளம் பிரதேசத்திலேயே அமையவேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக பல தரப்புக்களாலும் முன்வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.