வவுனியா தினச்சந்தை நாளையதினம் திறக்கப்படவுள்ளது.
வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களாக ஹொரவபொத்தானை வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட தினச்சந்தை மூடப்பட்டிருந்தது.
காமினி மகா வித்தியாலயம் மற்றும் கண்டி வீதியில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் ஆகியவற்றில் தற்காலிகமாக வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இதேவேளை சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் பிரகாரம் எவருக்கும் தொற்று இணங்காணப்பட்டிருக்கவில்லை. இதன்பின்னர் நேற்று அதிகாலை 6 சந்தைத் தொகுதியைத் திறப்பதற்காக ஊழியர்கள் முனைந்த போது பொலிஸார் அதற்கான அனுமதியை மறுத்திருந்தனர்.
இதனையடுத்து வியாபாரிகள் வீதியை மரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக தொடர்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து உடன் ஸ்தலத்திற்கு விரைந்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் வவுனியா மாவட்ட செயலாளர் பொலிஸ் உயர் அதிகாரிகள், சுகாதார பிரிவினர்கள் ஆகியோருடன் தொடர்பு கொண்டு நிலமையை தெரியப்படுத்தியதன் பிற்பாடு நாளைய தினம் சந்தையைத் திறப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது.
இதன்பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பிரசன்னமாகி இருந்தமைக் குறிப்பிடத்தக்கது.