மியன்மாரில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு : சுவிசிலிருந்து சண் தவராஜா
பர்மா என வரலாற்றில் அறியப்பட்ட நாடான மியன்மாரில் இராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பொதுத் தேர்தல் நடைபெற்று, முடிவுகள் வெளியாகி பின்னணியில், தேர்தலில் வெற்றிபெற்ற பிரதிநிதிகள் ஒன்றுகூடி புதிய ஆட்சியை அமைக்க இருந்த தறுவாயில் இந்த இராணுவத் தலையீடு நிகழ்ந்திருக்கின்றது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு ஒன்றும் ஆச்சரியமான செய்தியாக அமைந்திருக்கவில்லை. ஒரு வகையில், இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வே.
இராணுவ ஆட்சி
நவம்பர் 8 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாகவே “இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன, எனவே அவை தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என இராணுவத் தரப்பில் இருந்து தொடர்ச்சியான குரல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து இராணுவம் ஆட்;சியைக் கைப்பற்றக் கூடும் என்ற ஊகங்கள் வெளியிடப் பட்டிருந்தன. புதிதாக அமெரிக்க அரசுத் தலைவராகப் பதவியேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தில் இருந்து “இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தைக் கைவிட வேண்டும்” என்ற கோரிக்கையும் முன்வைக்கப் பட்டிருந்தது. இருந்தும் பெப்ரவரி முதலாம் திகதி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. தொடர்ந்து மியன்மாரின் உத்தியோகபூர்வ அரசுத் தலைவியாக இல்லாவிடினும், நடைமுறையில் தலைவியாக விளங்கும் ஆங் சான் சு கி மற்றும் உத்தியோகபூர்வ அரசுத் தலைவரான வின் மின்ற் உட்பட முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.
கொவிட் 19 கொள்ளை நோயினால் முழு உலகுமே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மியன்மாரில் நிகழ்ந்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பு ஒரு பெரிய விடயமாகப் பார்க்கப்படாது விட்டாலும், அதனைப் பாரிய விடயமாக மாற்றுவதில் மேற்குலக ஊடகங்கள் முனைப்புக் கொண்டுள்ளதை செய்தி அளிக்கைகள் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.
பொதுத் தேர்தல் முடிவுகள்
பிரித்தானியாவின் முன்னை நாள் காலனித்துவ நாடான மியன்மாரில் இராணுவத்தினுடைய வகிபாகம் என்பது எப்போதும் செல்வாக்குமிக்க ஒன்றாகாவே இருந்து வந்துள்ளது. 1948 இல் சுதந்திர நாடான மியன்மாரில் 14 ஆண்டுகள் மாத்திரமே குடிமக்கள் ஆட்சி நிலவியது. 1962 ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் 2011 ஆம் ஆண்டிலேயே மீண்டும் குடி மக்கள் ஆட்சிக்கு வழி செய்தது. 2015 ஆம் ஆண்டில் ஜனநாயகத் தேர்தல்கள் மூலம் குடிமக்கள் ஆட்சி அமைந்தாலும் கூட, இராணுவத்தின் பிடி ஆட்சியில் இருக்கவே செய்தது. மறைமுகமாக இருந்த இத்தகைய பிடி தற்போது வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியுள்ளது என்பதே வேறுபாடு.
நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சு கி தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசியப் பேரவைக் கட்சி 83 வீதமான வாக்குகளைப் பெற்று, 476 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 396 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. மறுபுறம், இராணுவத்தின் ஆதரவு பெற்ற கட்சியான ஐக்கிய நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்திக்கான கட்சி வெறும் 33 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. ஆட்சியில் இருந்து தங்கள் பிடி நழுவிச் செல்வதை விரும்பாத நிலையிலேயே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் சூழல் உருவாகியதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டுச் சிக்கல்கள்
மியன்மாரின் அரசியல் என்பது சிக்கல்கள் அதிகம் நிறைந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் வாழும் இந்த நாட்டில் பிரித்தானியர்கள் உருவாக்கிய எல்லைகளைக் கொண்ட நாடு பொருத்தமற்ற வகையில் உள்ளது. தமது சுரண்டலுக்கு ஏற்றதாக பிரித்தானியர்கள் வகுத்த எல்லைகள் இனக் குழுமங்களின் தனித்துவம், பண்பாடுகள் என்பவற்றைக் கருத்தில் கொள்ளாமல் உருவாக்கப்பட்டதால் சுதந்திரம் பெற்ற நாள் முதலாகவே உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகின்றது. கரன் இனத்தவர்களில் இருந்து இன்றைய றொகிங்யா முஸ்லிம்கள் வரை ஆயுத மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. தொடர்ச்சியான ஆயுத மோதல்கள் நடைபெற்றுவரும் நாடுகளில் இராணுவத்தினரின் கரங்கள் ஓங்கியே இருக்கும் என்பது சொல்லாமலேயே புரியும். அந்த நிலையே மியன்மாரிலும் நீடிக்கிறது.
கீழைத்தேயப் பாரம்பரியங்களைக் கடைப்பிடிக்கும் மியன்மார் போன்ற நாடுகளில் மேலைத்தேயக் கலாசார எதிர்ப்பு என்பது சர்வ சாதாரணமானது. இரண்டு வகைக் கலாசாரங்களும் ஒன்றுக்கொன்று எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டவை. அந்த வகையில் மியன்மாரில் மேற்குலகிற்கு எதிரான உணர்வுகள் மிகையாகக் காணப்படுகின்றன. தொடர்ச்சியாகப் பல பத்தாண்டுகளாக நிலவிய இராணுவ ஆட்சியை, தனியே இராணுவ ஆட்சி என்ற சமன்பாட்டில் வைத்து அணுகிய மேற்குலகம் பொருளாதராத் தடைகள், பயணத் தடைகள் என்பவற்றை விதித்ததன் ஊடாக – தெரிந்து கொண்டே – மியன்மாரை சீன ஆதரவு நாடாக மாற்றி விட்டன. வர்த்தக நடவடிக்கைகளுக்கும், முதலீடுகளுக்கும் பெரிதும் சீனாவைச் சார்ந்திருக்கும் மியன்மாரை தனது நலன்களுக்காப் பயன்படுத்திக் கொள்ள சீனா முயன்றதில் வியப்பேதும் இருக்க முடியாது.
தெற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்கப் பிரசன்னத்திற்குச் சவாலாக விளங்கும் சீனாவிற்கு மியன்மாரும், அதனை அண்டிய மலார்க்கா நீரிணையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களாக உள்ளன. தனது பட்டுப் பாதைத் திட்டத்தில் மியன்மாரையும் இணைத்துக் கொண்டுள்ள சீனா தொடர்சியாகத் தனது செல்வாக்கை வலுவாக்கி வருகின்றமையை அவதானிக்கலாம்.
மேற்குலகின் வெறுப்புக்கு ஆளான சுகி
மேற்குலக ஆதரவாளர் எனக் கருதப்படும் ஆங் சான் சு கி 1991 இல் நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவர். அவர் சார்ந்த தேசிய ஜனநாயகப் பேரவைக் கட்சியின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் சுதேச வர்த்தக சமூகமும் மேற்குலக ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. ஆனால், 2007 ஆம் ஆண்டில் றொகிங்யா இன இஸ்லாமியர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட படை நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் விதத்தில் ஆங் சான் சு கி வெளியிட்ட கருத்துக்கள் மேற்குலகின் விரோதத்தை அவருக்குச் சம்பாதித்துத் தந்தன. மேற்குலகினால் இனப் படுகொலை என வர்ணிக்கப்பட்ட றோகிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் `இனப் படுகொலை’ என அங்கீகரிக்காத காரணத்தினால் அவருக்கு வழங்கப்பட்ட நோபல் சமாதானப் பரிசைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் எழும் அளவிற்கு அவர் மேற்குலகின் விரோதத்தைச் சம்பாதித்துக் கொண்டார். இதனால் ஒரு காலத்தில் சமாதானத் தேவதையாகக் கருதப்பட்ட சு கி, வேண்டப்படாதவர் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இந்த நிலையில் அவரும் கூடத் தவிர்க்க முடியாமல் சீனச் சார்பு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இதேவேளை, தற்போது ஆட்சியைப் பிடித்துத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இராணுவத்தின் தலைமை அதிகாரியான மூத்த ஜெனரல் மின் அங் லைங் உட்படப் பலர், ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகளை எதிர்கொண்டு உள்ளனர்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், மியன்மாரில் மலரும் ஜனநாயகம் என்பவை இராணுவ அதிகாரிகளுக்குச் சிக்கலைத் தரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையிலேயே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்தல்
இந்நிலையில் ஹொங்கொங்கில் நடைபெற்றதைப் போன்று ஜனநாயக(?)ப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என மேற்குலகம் எதிர்பார்க்கின்றது. இதனையே, மேற்குலக ஊடகங்களும் விதந்துரைக்கின்றன. அதன் விளைவாக ஜனநாயகம் நிலைநிறுத்தப் படுகின்றதோ இல்லையோ, தமது பூகோள அரசியல் நோக்கங்கள் நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளதாக மேற்குலகம் நம்புகின்றது. தெற்காசியப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான ஒரு வாய்ப்பாக இது பார்க்கப்படுகின்றது.
மியன்மாரில் இராணுவம் ஆட்சிக் கட்டிலில் இருக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அந்த நாட்டு மக்களே. அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குகின்றோம் என்ற போர்வையில் அவர்களைத் தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டங்களிலும் வேலை நிறுத்தங்களிலும் ஈடுபடச் செய்வது இராணுவ ஆட்சியாளர்களை மேலும் மேலும் கடினப் போக்கைக் கடைப்பிடிக்கவே தூண்டும் என்பதை இதன் பின்னணியில் இயங்குபவர்கள் புரிந்து கொள்வதில்லை.
தன்னெழுச்சியாக வெளிப்படும் போராட்டங்களை அணுகுவதற்கான அதே உத்திகளை தூண்டிவிடப்படும் போராட்டங்களை அணுகுவதற்கும் இராணுவம் கைக்கொள்ளும் என எதிர்பார்ப்பது அறிவிழிவு.
தற்காலத்தில் ‘ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்தல்’ என்றொரு செயற்திட்டத்தை அமெரிக்கா கைக்கொண்டு வருகின்றது. மேற்குலகின் நலன்சார்ந்ததாக எங்கெல்லாம் மக்கள் போராட முன்வருகின்றார்களோ அங்கெல்லாம் தனது முகவர்களைப் பயன்படுத்தி போராட்டங்கள் உத்வேகம் பெற அமெரிக்கா மூளையையும், பொருளாதாரத்தையும் தாராளமாகச் செலவிட்டு வருகின்றது. இதற்கெனப் பயிற்றுவிக்கப்பட்ட நிபுணர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் களமிறக்கப்பட்டு வருகின்றனர். இந்த உத்தியை உக்ரைன் முதல் ஹொங்கொங் வரை அமெரிக்கா பயன்படுத்தி வந்துள்ளது. புதிதாக மியன்மாரும் அந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.
இன்று உலக அரங்கில் அனைத்துத் துறைகளிலும் அமெரிக்காவுக்கு வலுவான போட்டியாளராக சீனா விளங்குகின்றது. உலகின் பல நாடுகளிலும் போர்களில் ஈடுபடும் அமெரிக்கா தனது பொருளாதாரத்தைச் சீரழித்துக் கொண்டிருக்க, எந்தவொரு நாட்டிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ போரில் ஈடுபடாமல் தனது சகல வளங்களையும் சீனா பாதுகாத்துக் கொண்டு வருவதைக் காண முடிகின்றது. அது மாத்திரமன்றி, ஹொங்கொங் விடயத்தில் மேற்குலகின் தந்திரத்தை முறியடித்து, தனது பிடியை வலுவாக்கிக் கொண்ட அனுபவத்தையும் சீனா கொண்டுள்ளது.
மியன்மாரில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்களின் கிளர்ச்சி என்ற போர்வையில் அமெரிக்கா மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகள் மியன்மாரில் உண்மையான ஜனநாயகத்தை மீட்பதற்கு உதவுமா அல்லது மேலும் மேலும் அந்த நாடு சீனாவின் பக்கம் சாய்வதற்கு வழி சமைக்குமா என்பது போகப் போகத் தெரியும்.