குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி வேண்டுமா, கூடாதா? : தி. ஷிவானி
குழந்தைகளுக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு என்பதால் அவர்களுக்கு அவசரப்பட்டு தடுப்பூசி போட வேண்டியதில்லை என்ற பேச்சு இருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் குறைந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டன. நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் என்னதான் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் இன்னும் பாதுகாப்பாக இருக்கலாமே என்ற கேள்வி எழுகிறது. ஆனால், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் பல குழப்பங்கள் இருக்கின்றன.
நோய்கள் வரும் முன்னே, காப்பதற்கும் சரி மீண்டும் வராமல் தடுப்பதற்கும் சரி தடுப்பூசிகள் பெரிதும் உதவி செய்கின்றன. அந்த வகையில உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி பரவலாகப் போடப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் ஜனவரியில் சுகாதாரப் பணியாளர்களிடமிருந்து ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசியிடும் பணி குழந்தைகளிடமும் வரும் ஜூன் மாதத்துக்குள் போய்ச் சேர்ந்துவிடும் எனப் பேசப்பட்டு வருகிறது. இன்னொரு புறம், குழந்தைகளுக்கு கொரோனா தொற்றும் அபாயம் குறைவு என்பதால் அவர்களுக்கு அவசரப்பட்டு தடுப்பூசி போட வேண்டியதில்லை என்ற பேச்சும் ஒருபுறம் இருக்கிறது.
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவர் மாதுரி மற்றும் சமூக ஆர்வலரும் மருத்துவருமான புகழேந்தியிடம் பேசினோம்.
“குழந்தைகளுக்கு, சாதாரண சளி, காய்ச்சல் வந்தால் எப்படி சிகிச்சையளிப்போமோ அப்படித்தான் கொரோனா நோய் தொற்றுக்கும் செய்கிறோம். கொரோனா தொற்றால் குழந்தைகளைவிட பெரியவர்களே இதுவரை அதிக பாதிப்புக்கு உள்ளாகிவருகின்றனர்.
குழந்தைகள் நல மருத்துவர் மாதுரி
பள்ளிகளில் சமூக இடைவெளி முதல் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் முக்கிய காரணம் இருக்கிறது. குழந்தைகள் பள்ளிகளிலிருந்து நோய்த் தொற்றை எளிதில் வீட்டுக்குள் கடத்திவிடுவார்கள். இதனால் சிக்கலில் மாட்டிக்கொள்வது வீட்டிலிருக்கும் பெரியவர்கள்தாம்.
அரசு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்தால் போதும் என்னும் சூழலே தொடர்ந்துவருகிறது. விருப்பப்பட்டால் ஆன்லைனிலேயேகூட வகுப்புகளை அட்டெண்ட் செய்துகொள்ளும் ஆப்ஷனும் மாணவர்களுக்கு இருக்கிறது. என்னதான் மற்ற வகுப்புகளுக்கும் பள்ளிகள் செயல்பட ஆரம்பிக்கப்போவதாகக் கூறி வந்தாலும் அதற்கு இன்னும் அத்தியாவசியம் வரவில்லை என்பதை உணர்ந்து தான் அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் குழந்தைகள் நல மருத்துவர் மாதுரி.
குழந்தைகளுக்கு கொரோனா நோய்த்தடுப்பூசியின் அவசியம் குறித்து மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டபோது, “கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தைவிட சமீபகாலமாகத் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துதானே வருகிறது. அப்போது எதற்கு தடுப்பூசி? பெரியவர்களுக்கே தடுப்பூசிகள் அத்தியாவசிய மில்லாத நிலையில் குழந்தைகளுக்கு எதற்கு தடுப்பூசி?
தடுப்பூசி ஆதரவாளர்களே முதல்முறையாக கொரோனா நோய்த் தொற்றுக்குத் தடுப்பூசி கொடுப்பதைத் தவறு என்றிருக்கிறார்கள்.
மருத்துவர்-சமூக ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி
ஆரம்ப காலத்திலிருந்த நிலையைவிட இப்போது கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. குழந்தைகளுக்கு பாதிப்பு விகிதம் மிக மிகக் குறைவு, இறப்பு விகிதம் இன்னமுமே குறைவுதான். குழந்தைகளுக்குத் தடுப்பூசி கொடுப்பதற்கு முன் சோதனைகள் (trials) நடத்தப்படுவது கட்டாயம். அதுவே, இன்னமும் நடத்தப்படாத பட்சத்தில் கொரோனா தடுப்பூசிக்கான பரிந்துரை செய்யப்பட வேண்டிய தேவையே இல்லை” என்கிறார் மருத்துவர் புகழேந்தி.
நன்றி: விகடன்