ஐ.நாவின் நெருக்கடிக்கு அஞ்சி சுயாதீனத்தை இழக்கமாட்டோம் – பிரதமர் மஹிந்த
“போரை வெற்றி கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் குற்றவாளியாக்கியது. பல நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நன்கு அறிந்தும் நாட்டுக்கு எதிரான தீர்மானத்திலிருந்து விலகினோம். எவ்வாறான நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நாட்டின் சுயாதீனத்தன்மையை விட்டுக்கொடுக்க மாட்டோம். நாட்டின் உரிமை நாட்டு மக்களுக்கே வழங்கப்படும்.”
– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“பௌத்த சாசனத்தை முன்னிலைப்படுத்தி அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் நன்மைக்கு சர்வ மதங்களின் ஆசிர்வாதம் அவசியமாகும்.
அனைத்து மதத்தின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது பௌத்த சாசனத்துக்கு எதிராக நல்லாட்சி அரசு செயற்பட்டது. இதனால் கடந்த காலங்களில் மதங்களுக்கிடையில் பெரும் பிணக்கு ஏற்பட்டது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ராஜபக்ச பெயருடன் தொடர்புடையவர்களையும், எமது ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகளையும் நல்லாட்சி அரசு, அரசியல் பழிவாங்கலுக்குட்படுத்தியது.
பௌத்த மதத்துக்கும், பௌத்த மதத் தலைவர்களுக்கும் எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பௌத்த சாசனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைத்துத் தரப்பிலும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. பிக்குகளின் பெற்றோருக்கு வீடு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
30 வருட கால போர் பொருளாதாரம், சமூகம், நல்லிணக்கம் ஆகியவற்றுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
முடிக்க முடியாது என்று பலரும் குறிப்பிட்ட போரை முடிவுக்குக் கொண்டு வந்து குறுகிய காலத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதாரம் ஆகியவற்றை ஒருசேர முன்னேற்றமடையச் செய்தோம்.
போரை வெற்றி கொண்ட இராணுவத்தினரை நல்லாட்சி அரசு ஜெனிவாவில் குற்றவாளியாக்கியது.
நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை நன்கறிந்தும் நாட்டுக்கு எதிரான தீர்மானத்திலிருந்து விலகினோம். நாட்டின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதற்காகப் பல நெருக்கடியான தீர்மானங்களை எடுத்துள்ளோம்.
நாட்டின் உரிமையை நாட்டு மக்களுக்கே வழங்குவோம். தற்போதும்கூட நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சுயாதீன முறையில் தீர்மானம் எடுத்துள்ளோம்.
ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மதத்தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளனர்.
ஆகவே, மதத் தலைவர்கள் அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி ஆட்சியை நல்வழிப்படுத்தத் தொடர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” – என்றார்.