ரிஷி கபூரின் தம்பியும், நடிகருமான ராஜீவ் கபூர் மாரடைப்பால் மரணம்

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் இளைய மகன் ராஜீவ் கபூர். பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜீவ் கபூர் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

உடனே அவரை அண்ணன் ரந்தீர் கபூர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராஜீவ் கபூரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ராஜீவ் கபூர் இறந்த செய்தியை அவரின் அண்ணியான நடிகை நீத்து கபூர் சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.

ராஜீவ் இறந்த செய்தி அறிந்த திரையுலக பிரபலங்கள் கபூர் குடும்பத்திற்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ராஜீவ் கபூருக்கு வயது 58.

ராஜீவ் பற்றி ரந்தீர் கபூர் கூறியதாவது,

என் தம்பி ராஜீவ் இறந்துவிட்டார். மருத்துவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. நான் மருத்துவமனையில் இருக்கிறேன். அவரின் உடலை வாங்கிச் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

ராம் தேரி கங்கா மைலி(1985), ஏக் ஜான் ஹைன் ஹம்(1983) ஆகிய படங்களால் பிரபலமானவர் ராஜீவ் கபூர். தன் அண்ணன் ரிஷி கபூரை ஹீரோவாக வைத்து பிரேம் கிரந்த் என்கிற படத்தை இயக்கினார்.

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ரிஷி கபூர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி மும்பையில் உயிரிழந்தார். ரிஷி கபூர் இறந்த ஓராண்டுக்குள் ராஜீவ் இறந்துவிட்டார். அடுத்தடுத்து இரண்டு பேரை இழந்த கபூர் குடும்பத்திற்கு பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

ராஜீவின் மரணம் குறித்து அறிந்த குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் பேரதிர்ச்சி அடைந்திருக்கிறேன். அதற்குள் நீங்கள் எப்படி போகலாம் சிம்ப்பு. மனமுடைந்துவிட்டேன். நீங்கள் கற்றுக் கொடுத்து தான் நான் தலை நிமிர்ந்து நடக்கிறேன், தைரியமாக பேசுகிறேன். திரும்பி வாங்க சிம்ப்பு. உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.