அ.தி.மு.க நிர்வாகிக்கு கத்தி குத்து
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, அ.தி.மு.க பிரமுகர் ஒருவரை 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் ஒன்று திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்திருப்பதாகக் கூறி அழைத்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (48). இவர் வில்லிவாக்கம் ஒன்றிய அ.தி.மு.க துணை செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். முன்னாள் கவுன்சிலராகவும் மூர்த்தி இருந்துள்ளார். பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராக அறியப்படும் மூர்த்தி, கட்டப்பஞ்சாயத்து மற்றும் ரியல் எஸ்டேட் வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. நிலம் மற்றும் பஞ்சாயத்து விவகாரங்களைக் கையாண்டு வந்த மூர்த்திக்குத் தொழிலில் எதிரிகள் அதிகளவில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மூர்த்தி, அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள தன் வீட்டின் வெளியில் நின்றுகொண்டு தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவரை காண 4 இளைஞர்கள் வந்துள்ளனர். திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்துள்ளதாக மூர்த்தியிடம் தங்களை அறிமுகப்படுத்தி விட்டு, பேசத் தொடங்கியவர்கள் சிறிது நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளை வெளியில் எடுத்து மூர்த்தியைச் சரமாரியாக வெட்டத் துவங்கியுள்ளனர். இளைஞர்களின் தாக்குதல்களைச் சற்றும் எதிர்பாராத மூர்த்தி நிலைதடுமாறி விழுந்துள்ளார். மேலும், அந்த கும்பலிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தப்பி பிரதான சாலைக்கு அலறியடித்தபடி ஓடியுள்ளார்.
மூர்த்தியின் அலறல் சத்தம் கேட்டு பகுதிவாசிகள் திரண்டுள்ளனர். மக்கள் கூட்டம் கூடியதை அடுத்து 4 இளைஞர்களில் 3 பேர் ஓட்டம் பிடித்துள்ளனர். ஆனால், ஒரு ஆசாமி மட்டும் மூர்த்தியை விடாமல் துரத்தி வெட்டி கொலை செய்ய முயன்றுள்ளார். அசாமியிடம் இருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மூர்த்தியும் பதிலுக்குக் கத்தியைப் பிடுங்கி வெட்டியுள்ளார். மூர்த்தியைக் கொலை செய்ய வந்த மூவர் ஓட்டம் பிடித்ததை அடுத்துச் சிக்கிய இளைஞரை மட்டும் பொதுமக்கள் பிடித்து வைத்துக்கொண்டு, திருமுல்லைவாயில் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் மூர்த்தியை மீட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட இளைஞரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போலீசார் விசாரணையில், அ.தி.மு.க பிரமுகர் மூர்த்தியைக் கொலை செய்ய முயன்ற 4 பேர் கொண்ட கூலிப்படை கும்பலில் பிடிபட்ட நபர் பிரபாகரன் என்பது தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட பிரபாகரன் அளித்த தகவலின் பேரில் அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விஜயசேகர் (23), முத்து (23) மற்றும் ராஜீ (19) ஆகியோரை திருமுல்லைவாயில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்து கூலிப்படையினர் அ.தி.மு.க பிரமுகரைக் கொலை செய்ய முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.