எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணிக்குப் பின்னர் எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேடப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. விசேடப் பாதுகாப்பு வேண்டுமென நான் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.
எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அதற்கு தற்போதைய அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தொழில் அமைச்சின் கீழுள்ள ஊழியர் சகாய நிதியியல் சட்டத்தின் கீழா ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘வாழ்க்கைச் செலவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தொழிலாளரக்ளுக்கு 02 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்கியிருக்க வேண்டும். எனினும் வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கூட தொழிலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்படவில்லை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எமதுப் போராட்டத்தில், தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக் கோரிக்கையும் எமது 10 கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையலான தொடர்ப் போராட்டத்துக்குப் பிறகு எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேடப் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. எனக்கு விசேடப் பாதுகாப்பு வேண்டுமென நான் எந்தவிதமானக் கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.