இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

உலகிலேயே கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அங்கு தற்போது முன்பைவிட அதிக வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.
வைரஸ் பரவி வரும் அதே வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது. உலகிலேயே கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்த முதல் நாடு இங்கிலாந்துதான். அந்த வகையில் இங்கிலாந்தில் இதுவரை 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் 94 வயதான இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கும், 99 வயதான அவரது கணவர் பிலிப்புக்கும் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும் இளவரசருமான சார்லசுக்கு (வயது 72) நேற்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 73 வயதான அவரது மனைவி கமிலாவும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இங்கிலாந்தில் பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ள நிலையில் இளவரச தம்பதிக்கு எந்த தடுப்பூசி போடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இளவரசர் சார்லஸ் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு பின்னர் அவர் அதிலிருந்து மீண்டு வந்ததும் நினைவுகூறத்தக்கது.