குழம்பி நிற்கும் தமிழக அரசியல் களம்! திமுகவுடன் கூட்டணி போட உள்ளாரா சசிகலா?
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா தற்போது தமிழகம் திரும்பியுள்ளார். இவருடைய வருகையை குறித்து தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் சசிகலா திமுகவின் டீம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை மெய்ப்பிக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
ஏனென்றால் சசிகலாவின் தமிழக வருகையை அனைத்து ஊடகங்களும் ஒளிபரப்பினாலும், திமுகவின் சேனலான சன் டிவி காலை முதலே தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது. அதுமட்டுமில்லாமல், வாணியம்பாடி அருகே சசிகலா கொடுத்த பேட்டியையும் சன் டிவி ஒளிபரப்பியது.
மேலும் சசிகலாவின் வருகை ஆளும் கட்சிக்கு எதிராக அமையும் என்று எண்ணி தான் சன் டிவி இந்த செய்தியை தொடர்ந்து ஒளிபரப்பியதாகவும் சொல்லப்படுகிறது. மறுபுறமோ டிடிவி தினகரன் தரப்பிலிருந்து சன் டிவி இடம் சசிகலாவின் வருகையை தொடர் நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படி ஒரு நிலையில் சிவகங்கை பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது, முதலமைச்சர் எடப்பாடி நம்பியார் திமுகவால் இனி செயல்பட முடியாது என்றும், அவரை நம்பி ஆட்சியோ கட்சியோ நடத்த முடியாது என்றும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல், அதற்கு முந்தைய கூட்டமொன்றில் ஸ்டாலின், ‘பெங்களூரிலிருந்து ஒருவர் வருகிறார். என்ன நடக்கும் என்று தெரியவில்லை’ என கூறியிருந்தார்.
இதுவரை திட்டங்களை குறித்தும், ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்த ஸ்டாலின், தற்போது கட்சி நடத்த முடியாது என்று கூறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, வேறு ஒரு கோணத்தையும் உருவாக்கியுள்ளது.
மேலும் இதுபற்றி விசாரித்தபோது சசிகலா தரப்பு திமுகவுடன் ரகசிய கூட்டணி பேசி உள்ளதாகவும், எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கூற்றுக்கு ஏற்ப இந்த கூட்டணி செயல்படுவதாகவும் விபரம் அறிந்தவர்களின் வாயிலாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கு முக்கிய சான்றாக சன் டிவியின் தொடர் நேரலை, ஸ்டாலினின் பேச்சும் அமைந்துள்ளது.
அதேபோல் தேர்தலுக்குப் பிறகு சசிகலா அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காகத்தான் திமுகவுடன் ரகசிய பேரம் பேசி உள்ளதாகவும், டிடிவி தினகரன் ஸ்டாலினை சந்தித்து ரகசியமாக பேசி இருப்பதாகவும், தொகையை கைமாற்றி உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ஒன்றிணைவோம் வா என்று அமமுக கட்சி திமுகவை தான் அழைக்கிறது’ என்று ஆணித்தனமாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கொள்கைக்கு எதிராக இருப்பவர்களுடன் சசிகலா ரகசிய கூட்டணி அமைத்து கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.