மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கமல்ஹாசனை நிரந்தர தலைவராக்கத் தீர்மானம்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. இதில் தமிழகத்தின் முன்னணி கட்சிகளுக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வரும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், காங்கிரஸ், திமுக கட்சிகள் கமல்ஹாசன் எங்களுடன் இணைந்தால் வரவேற்போம் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளன.
இதனால் கமல்ஹாசன் தனித்து போட்டியிடுவாரா, அல்லது காங்கிரஸ் கூட்டணியில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் நீதி மய்யத்தின் இன்றைய பொதுக்குழு கூட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த்தாக கருதப்பட்டது. அதன்படி, சென்னை வானரகத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் காலை 11 மணிக்கு தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள் செயற்பாட்டாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிரந்தர தலைவராக கமல்ஹாசன் செயல்படுவார் என்றும், கட்சி தொடர்பான முக்கிய முடிவுகள், தேர்தல் கூட்டணி முடிவுகள், வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க கமல்ஹாசனுக்கே அதிகாரம் உள்ளதாக பொதுக்குழு உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் மக்களின் நலனுக்காக உழைத்த பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழகத்தை சீரமைக்க மாணவர்கள் முன்வரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம், மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற தொடர் மரணங்கள் குறித்து தமிழக அரசு அலச்சியம் காட்டாமல் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தலுக்கு முன்பாக தமிழக கடன் விபரஙகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை விட வேண்டும் என்றும், 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக மீனவர்களின் தொழிலுக்கும், உயிருக்கும், உடமைக்கும் நிரந்தரப் பாதுகாப்பை ஏற்படுத்தி தமிழக மீனவர்களைக் காக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உண்டு. அதைச் செய்யத் தவறிய மத்திய, மாநில அரசை கண்டித்தும், ஓட்டுக்கு பணம் பரிசுப்பொருட்களை கொடுத்து ஓட்டு கேட்கும் நிலையை தேர்தல் ஆணையம் விழிப்புடன் செயல்பட்டு தடுக்க வேண்டும், தமிழகத்தில் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்கும் புகழாரம் சூட்டப்பட்டது. மேலும் தமிழகத்தில் தொடர்ந்துயாணைகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் குறிக்கோளான தமிழகத்தை சீரமைப்போம் என்ற கனவினை நனவாக்க அனைவரும் ஒன்றினைந்து பாடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.