தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி திரில் வெற்றி.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி திரில் வெற்றி.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி லாகூரில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்தது. தொடக்க ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் 104 ரன்கள் (64 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்)விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்த 2-வது பாகிஸ்தான் வீரர் என்ற சிறப்பை பெற்றார். கேப்டன் பாபர் அசாம் டக்-அவுட் ஆனார்.
பின்னர் 170 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் ஜானிமேன் மலான் (44 ரன்), ரீஜா ஹென்ரிக்ஸ் (54 ரன்) சிறப்பான தொடக்கம் அமைத்து தந்த போதிலும் மிடில் வரிசை வீரர்கள் தடுமாற்றம் கண்டனர். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 19 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் பஹீம் அஷ்ரப் வீசினார். முதல் 5 பந்தில் 13 ரன் திரட்டிய தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி பந்தில் 6 ரன் தேவைப்பட்டது. இறுதிப்பந்தை எதிர்கொண்ட பார்ச்சுன் 2 ரன் மட்டுமே எடுத்தார். 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணியால் 6 விக்கெட்டுக்கு 166 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பாகிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.