ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் 2-வது சுற்றில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் சோபியா கெனின் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின், 65-ம் நிலை வீராங்கனையான கயா கனேபியை (எஸ்தோனியா) சந்தித்தார்.
64 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சோபியா கெனின் 3-6, 2-6 என்ற நேர்செட்டில் கனேபியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியன் வீராங்கனை 3-வது சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுவது கடந்த 51 ஆண்டுகளில் இது 3-வது நிகழ்வாகும். தோல்வி அடைந்த சோபியா கெனின் கண்ணீர் மல்க கூறுகையில் ‘நான் நெருக்கடியை சிறப்பாக கையாளவில்லை என்பது எனக்கு தெரியும். இதுபோன்ற அனுபவத்தை எதிர்கொண்டது கிடையாது. அத்துடன் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் முழு தகுதியுடன் இல்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.
ஆஷ்லி பார்ட்டி அசத்தல்
மற்றொரு ஆட்டத்தில் நம்பர் ஒன் நட்சத்திரமான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-1, 7-6 (9-7) என்ற நேர்செட்டில் வைல்டு கார்டு வாய்ப்பு பெற்ற சக நாட்டு வீராங்கனை டாரியா காவ்ரிலோவாவை வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 40-ம் நிலை வீராங்கனையான டேனியலி காலின்சை (அமெரிக்கா) விரட்டியடித்தார்.
மற்ற ஆட்டங்களில் பெலின்டா பென்சிக் (சுவிட்சர்லாந்து), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), கோன்டாவிட் (எஸ்தோனியா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.
ரபெல் நடால் வெற்றி
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அறுவடை செய்தவரும், 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மைக்கேல் மோவை துவம்சம் செய்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டத்தின் போது பெண் ரசிகை ஒருவர் நடாலை நோக்கி நடுவிரலை உயர்த்தி ஆபாச சைகை காட்டியபடி சத்தமிட்டார். மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகையை உடனடியாக வெளியேற்றினர்.
தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-7 (5-7), 6-4, 6-1, 6-7 (5-7), 6-4 என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு பெற்ற ஆஸ்திரேலியாவின் கோக்கினாகிஸ்சை போராடி சாய்த்தார். இந்த ஆட்டம் 4 மணி 32 நிமிடம் நீடித்தது.
இதேபோல் மெட்விடேவ் (ரஷியா), பெரேட்டினி (இத்தாலி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா), பாபி போக்னினி (இத்தாலி), கச்சனோவ் (ரஷியா) ஆகியோர் வெற்றிகரமாக 2-வது சுற்றை கடந்தனர்.
இந்திய ஜோடிகள் தோல்வி
ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் திவிஜ் சரண் (இந்தியா)-இகோர் ஜிலினா (சுலோவக்கியா) இணை 1-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் யானிக் ஹன்மான்-கெவின் காவிட்ஸ் ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் அங்கிதா ரெய்னா (இந்தியா)-மிஹாலா புஜார்னிஸ்கு (ருமேனியா) ஜோடி 3-6, 0-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் பெலின்டா உல்காக்-ஆலிவியா காடெக்கி இணையிடம் ‘சரண்’ அடைந்தது. முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் கால்பதித்த அங்கிதா ரெய்னாவின் கனவு முதல் சுற்றுடன் தகர்ந்தது.