சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது! தமிழர்கள் கனவு காணக்கூடாது.
சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது! – தமிழர்கள் கனவு காணக்கூடாது என்கிறார் அமைச்சர் சந்திரசேன
“இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசுதான் தீர்வுகளை வழங்கும். அதைவிடுத்து சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கனவு காணக்கூடாது.”
இவ்வாறு காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
“சர்வதேச அரங்கில் அரசைப் பலவீனப்படுத்தவே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னெடுத்துள்ளனர்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இவ்வாறான பேரணியால் அரசை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை எனவும், இதுவரையில் குற்றச்சாட்டுக்கள் எவையும் ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் இலங்கை விவகாரத்தில் ஒருதலைபட்சமாகவே செயற்படுகின்றார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அடிப்படை கொள்கைக்கு முரணானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், இம்முறை இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் பலம் கொண்ட நாடுகள் செயற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.