அரச கூட்டை உடைக்கச் சதி முயற்சி! வாசுதேவ தெரிவிப்பு.
அரச கூட்டை உடைக்கச் சதி முயற்சி! – வாசுதேவ தெரிவிப்பு.
“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரச கூட்டை உடைக்கச் சிலர் சதி முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்தத் திட்டங்கள் ஒருபோதும் வெற்றியளிக்கமாட்டாது.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இது ஜனநாயக நாடு. பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் பொதுவாக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஒரு உயரிய பதவி வழங்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திரிபுபடுத்தப்பட்டுள்ளது.
இதைச் சிலர் பெரிதுபடுத்தி கூட்டணிக்குள் முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைத் தோற்றுவிக்க முன்னின்று செயற்பட்டவர்களை விமர்சிப்பதற்கு இடமளிக்க முடியாது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணிக்குள் பல கட்சிகள், சிவில் அமைப்புக்கள் அங்கம் வகிக்கின்றன. அனைவரது கருத்துக்கும் யோசனைக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். கூட்டணி என்ற நிலையில் மாறுபட்ட பல கருத்துக்கள் காணப்படலாம். ஆகவே, கூட்டணியைப் பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது” – என்றார்.