புதிய S14 ரயில் யாழ்ப்பாணம் கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவை.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய S14 ரயில் யாழ்ப்பாணம் கொழும்பு இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவையில் இன்று முதல் ஈடுபடவுள்ளது.
இதில் புதிய வகுப்புகள் இணைக்கப்பட்ட சேவை கொழும்பிலிருந்து புறப்பட்டு இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது.
இந்த சேவை தினமும் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் ரயில் நிலைய பிரதான அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்.
கல்கிசையிலிருந்து தினமும் அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை புறக்கோட்டையில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்.
காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் தொடருந்து யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு கொழும்பு புறப்படும்.
இந்த சேவையில் இதுவரை குளிரூட்டப்பட்ட வகுப்புகளே காணப்பட்டன. எனினும் இன்று முதல் இந்த சேவையில் இரண்டாம் வகுப்பில் 2 பெட்டிகளும் மற்றும் மூன்றாம் வகுப்பில் ஒரு பெட்டியுமாக 3 மேலதிக பெட்டிகள் இணைக்கப்பட்டு 7 பெட்டிகளில் பயணிகள் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்புக்கு ஆயிரத்து 700 ரூபாயும் இரண்டாம் வகுப்புக்கு 1,000 ரூபாயும் மூன்றாம் வகுப்புக்கு 700 ரூபாயும் கட்டணம் அறவிப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.