பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழப்பு.
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்த நிலையில், அவர்களது குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் விருதுநகரில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. துக்கத்தின் இந்த நேரத்தில், என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.