முற்போக்குக் கூட்டணிக்குள் முறுகல்; தனிவழி செல்கின்றாரா ராதா எம்.பி?
முற்போக்குக் கூட்டணிக்குள் முறுகல்;
தனிவழி செல்கின்றாரா ராதா எம்.பி?
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்குள் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி, இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகியன கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
மலையகத்தில் உதயமான கூட்டணிகளுள் நான்கு வருடங்களுக்கு மேல் தாக்குப்பிடித்து நின்ற கூட்டணி என்ற பெருமை தமிழ் முற்போக்குக் கூட்டணியையே சாரும். அவ்வாறானதொரு கூட்டணிக்குள்தான் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு மலையக மக்கள் முன்னணியின் செயற்பாடே காரணம் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அ.அரவிந்குமார் எம்.பியை, தமிழ் முற்போக்குக் கூட்டணியிலிருந்து இடைநிறுத்திய நிர்வாகக்குழு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை மலையக மக்கள் முன்னணியிடம் ஒப்படைத்தது.
எனினும், மலையக மக்கள் முன்னணி இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அரவிந்குமாரை கட்சியில் தக்கவைத்துக்கொள்வதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்ல சம்பள உயர்வு போராட்டத்துக்கான ஆதரவையும் மலையக மக்கள் முன்னணி தன்னிச்சையாக வெளியிட்டதால் இதர இரு பங்காளிகளும் அக்கட்சி மீது அதிருப்தியில் இருக்கின்றன.
இந்நிலையில், அடுத்துவரும் தேர்தல்களில் மலையக மக்கள் முன்னணி இல்லாமல்தான் போட்டியிட வேண்டும் எனத் தொழிலாளர் தேசிய சங்க உறுப்பினர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்விடயம் உட்பட மேலும் சில காரணங்களாலேயே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.