சாணக்கியன், ஜனா, கலையரசன், அரியம் உட்பட 7 பேருக்கு கல்முனை நீதிமன்றம் அழைப்பாணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), த. கலையரசன் உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 3ஆம் திகதி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நீதிக்கான பேரணியில் கலந்துகொள்வதைத் தடுக்கக் கோரி, கல்முனை பொலிஸ் நிலையத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 29 பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
குறித்த பேரணியில் நீதிமன்றத் தடை உத்தரவை மீறிக் கலந்துகொண்டனர் எனக் குற்றஞ்சாட்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் கல்முனைப் பொலிஸார் கடந்த 5ஆம் திகதி வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை கல்முனை நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், த.கலையரசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்புப் பேரவையின் தலைவர் செ. கணேசானந்தன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோருக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.