எவரும் வரலாம். எவரும் போகலாம். எங்கள் முற்போக்கு பயணம் தொடரும்..
எவரும் வரலாம். எவரும் போகலாம். எங்கள் முற்போக்கு பயணம் தொடரும்..
மலையக சமகால வரலாற்றில், தமிழ் முற்போக்கு கூட்டணி அதிகாரத்தில் இருந்த காலமே, அதிக காத்திரமான காரியங்கள் நிகழ்ந்த பொற்காலம்.
மனசாட்சியுள்ள எவரும் இதை மறுத்திட முடியாது.
ஆரம்பித்து முடிவுராத பல காரியங்கள் இன்னமும் உள்ளன. அவற்றை முடித்திட நாம் மீண்டும் எழுந்து அதிகாரத்துக்கு வருவோம்.
அதுவரை எதிரணியில் இருந்து காத்திரமான தேசிய பணியை நாம் ஆற்றுகிறோம்.
கீழ்வரும் ஆவணம், தமிழ் முற்போக்கு கூட்டணியின், 2015 முதல் 2019 வரையிலான நான்கு (4) வருட சாதனைகளை பட்டியலிடுகிறது.
எங்கள் முழு ஆட்சிகாலம், 2018 வருட ஒக்டோபர் மாத அரசியலமைப்பு சதியின் மூலமும், பின் 2019ம் வருடம் முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதனாலும், அதிகாரத்தில் இருந்த காலம் நான்கு (4) வருடங்களாக சுருங்கியது.
இந்த “நான்கு (4) வருட சாதனைகளை”, எங்களுக்கு முன் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்து, 1978 முதல் 2015 வரை சுமார் நாற்பது (40) வருட காலமாக, மாறி மாறி வந்த ஒவ்வொரு ஆட்சியிலும் அதிகாரத்தில் இருந்த ஏனைய “கட்சிகளின்” செயற்பாட்டுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
1. தோட்டங்களில் ஏழு பேர்ச் காணி வழங்கலுக்கான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. நீண்ட காலமாக நின்று போயிருந்த, இந்திய அரசின் பெருந்தோட்ட வீடமைப்பு உதவி திட்டம், இலங்கை-இந்திய அரசுகளின் ஒப்புதலுடன், இந்திய அரசுக்கும், புதிய மலைநாட்டு கிராமங்கள் அமைச்சுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, நடைமுறைக்கு வந்தது.
3. அதன்படி, தோட்ட தொழிலாளருக்கான சொந்த உறுதி பத்திரம் கொண்ட தனி வீடுகள் கட்டப்படும் திட்டம் மலைநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.
4. அவ்விதம், கட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் புதிய “கிராமங்களாக” அறிவிக்கப்பட்டு, மலைநாட்டின் மற்றும் இந்திய, இலங்கை பழம்பெரும் தலைவர்களின் பெயர்களால் பெயரிடப்பட்டன.
5. நுவரெலிய மாவட்டத்தில், மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் அமைக்கும் தீர்மானம், அரசாங்கத்துக்குள் நடைபெற்ற பெரும் வாத விவாதங்களுக்கு பின்னர், அரசாங்கத்தால், ஏற்றுக்கொள்ளப்பட்டு, புதிய பிரதேச சபைகள் அமைக்கப்பட்டு, மலையக தமிழ் மக்களால் அரசியல் அதிகாரம் பகிர்வு உண்மையாக உணரப்பட்டது
6. “மலையக மக்களால் வாக்களித்து தெரிவு செய்யப்படும் பிரதேச சபைகளுக்கு, தம்மை தெரிவு செய்யும் தோட்ட புறங்களுக்கு, அபிவிருத்தி நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது” என 1987 முதல் சுமார் 30 வருடங்களாக இருந்த, மலையக பிரதேச சபை அதிகார எல்லை சட்டத்தின் கொடூரமான 33ம் இலக்க விதி, அதற்கான திருத்த சட்டமூல அமைச்சரவை பத்திரம், அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தில் சட்டமாகி, இப்போது பிரதேச சபைகளின் அதிகார வரம்பு, தோட்டபுறங்களுக்கு உள்ளேயும், அதிகாரபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
7. மலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கும் அமைச்சரவை பத்திரம், அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் சமர்பிக்கப்பட்டு, இரு சந்தர்ப்பங்களிலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்று சட்டமாகி, பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகாரசபை அமைக்கப்பட்டுள்ளது.
8. சுமார் 300 தோட்டபுற பாடசாலைகளுக்கு, அவ்வவ் தோட்டங்களில், அவசியப்படும் போது, மேலதிக காணிகளை சுவீகரிக்கும் அதிகாரத்தை கல்வி துறைக்கு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தது.
9. மலையக மக்களுக்கு, தேசிய அரசியலமைப்பு பணியில், ஏனைய இனங்களுக்கு வழங்கப்படும் அதே சம அந்தஸ்தும், காத்திரமான சமபங்கும், வழங்கப்பட்டன.
10. தேசிய நிர்வாக அதிகார பரவலாக்கும் கொள்கையின்படி, புதிய ஆறு பிரதேச சபைகளுக்குள்ளும், ஏனைய பெருந்தோட்ட பிரதேசங்களிலும், புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
11. பெருந்தோட்ட மறுசீரமைப்பு இலக்கில், தோட்ட தொழிலாளர்களின் வருமானத்தை கூட்டும் வெளிப்பயிர்செய்கை வருமான திட்டம் சீரமைக்கப்பட்டு, தோட்ட தொழிலாளர்களை, சிறு நில உடைமையாளர்களாக (மலையக விவசாயி) ஆக்கும் திட்டம் பற்றிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு, அது, தமுகூ பங்கு கொண்டு ஆதரித்த, 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட்டது. இது இப்போது சாதகமான எதிர்கால பயன்பாட்டுக்கான ஆவணம்.
12. மலையக பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பில், தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் முன்னெடுப்பில் ‘மலையக சான்றோர் ஆய்வுக்குழு’ அமைக்கப்பட்டதுடன், அக்குழு கூடி ஆராய்ந்து, பல்கலைக்கழகம் தொடர்பான சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.
13. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து கலாச்சாரம், மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி ஆகிய அமைச்சரவை அமைச்சுகள் மற்றும் கல்வி ராஜாங்க அமைச்சு ஆகியவை மூலமாக மத்திய, மேல், சப்ரகமுவா, ஊவா, வட, கிழக்கு மாகாணங்களில் செய்யப்பட்ட பல மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி பணிகள் இங்கே கூறப்படவில்லை.