வங்க அணியை மேற்கிந்திய தீவுகள் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாக்காவில் நடைபெற்ற வங்காளதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
வங்காளதேசம் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் 390-க்கும் மேலான இலக்கை வெஸ்ட் இண்டீஸ் எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. முதலில் துடுப்பாட்டம் செய்த மேற்கிந்திய தீவுகள் 409 ரன்கள் குவித்தது. 2-வது நாளில் இருந்து ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதனால் வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 296 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
113 ரன்கள் முன்னிலையுடன் மேற்கிந்திய தீவுகள் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த அணி 117 ரன்னில் சுருண்டது. தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 113 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் ஒட்டுமொத்தமாக 230 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இதனால் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் தமிம் இக்பால் 46 பந்தில் 50 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து கொண்டே இருந்தனர்.
இதனால் போட்டி பரபரப்பாகவே சென்று கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் 188 ரன்கள் எடுப்பற்குள் வங்காளதேசம் 9 விக்கெட்டை இழந்தது, ஆனால் மெஹிதி ஹசன் அதிரடியாக விளையாடியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. என்றாலும் துணிச்சலாக நம்பிக்கையுடன் பந்து வீசிக் கொண்டிருந்தனர். வங்காளதேச அணியின் ஸ்கோர் 213 ரன்னாக இருக்கும்போது, மெஹிதி ஹசன் 31 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனால் மேற்கிந்திய தீவுகள் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்திய கார்ன்வெல், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தி முத்திரை பதித்தார்.