கொரோனா தாக்கிய முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார சற்று முன் காலமானார்!
இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார காலமானார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார்.
1941ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஹப்புத்தளைப் பகுதியில் பிறந்த லொக்குபண்டார, நாடாளுமன்றப் பிரவேசத்தை 1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாகப் பெற்றுக்கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர், பிரதி அமைச்சர், அமைச்சர், சப்ரகமுவ மாகாண ஆளுநர், சபாநாயகர் எனப் பல்வேறு பதவிகளை அவர் வகித்தார்.
2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி வரை இலங்கை நாடாளுமன்றத்தின் 18ஆவது சபாநாயகராக லொக்குபண்டார பதவி வகித்தார்.
அதன்பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையில் சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக அவர் பதவி வகித்தார்.
கடந்த வாரம் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அவர், கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், இன்று மாலை அவர் காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.