ஜெனிவாவைக் கையாள 7 பேர் கொண்ட குழு!தமிழ்த் தேசியக் கட்சிகள் தீர்மானம்.
ஜெனிவாவைக் கையாள 7 பேர் கொண்ட குழு!தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுகூடித் தீர்மானம்.
யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் ஜெனிவா விடயத்தைக் கையாள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதுவர்களுடனும், இணை அனுசரணை நாடுகளான பிரிட்டன், கனடா, ஜேர்மனி போன்ற நாடுகளுடனும் ஏனைய உறுப்பு நாடுகளுடனும் கலந்துரையாடி, தமிழ் மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இரா.சம்பந்தன் அல்லது அவரது பிரதிநிதி ஒருவர், சி.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரை உள்ளடக்கியே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் ஊடகங்களுடன் பேச, விடயங்களைக் கையாள சுரேஷ் பிரேமச்சந்திரனும், சீ.வீ.கே.சிவஞானமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் சார்பில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் தவிசாளர் தர்சன், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சி சார்பில் அதன் தலைவர் என்.சிறிகாந்தா மற்றும் பொதுச்செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரெலோ சார்பில் விந்தன் கனகரட்ணம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் சார்பில் பொ.ஐங்கரநேசன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் மற்றும் அனந்தி சசிதரன் தலைமையிலான கட்சியினர் கலந்துகொண்டனர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து எவரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.