மார்ச் முதலாம் திகதி தொடக்கம் வடக்கு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி.
வடக்கு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்தும் திட்டம் 108 மையங்களில் முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருந்து வழங்கும் நடவடிக்கையை சுகாதார அமைச்சு எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் தடுப்பூசி பெறத் தயாரானவர்களின் பட்டியலை சமர்ப்பிக்கும் பணி பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் கிடைத்ததும் மார்ச் முதலாம் திகதி பணி ஆரம்பமாகும் என்றார்.
மேலும், தடுப்பூசி ஏற்றுவது குறித்து மக்கள் அச்சமடையத் தேவையில்லை. வடக்கில் பணியாற்றும் 85 சதவீதத்துக்கும் அதிகமான சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். அவர்களுக்கு பாரதூரமான விளைவுகள் எவையும் ஏற்படவில்லை என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், கர்ப்பிணிகள், சிறுவர்கள், பாலூட்டும் தாய்மார் தவிர ஏனையோர் தடுப்பூசி ஏற்றும் திட்டத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.