முதலாம் தர மாணவர்களுக்கான பழ மரக்கன்றுகள் வழங்கும் தேசிய திட்டம்.
முதலாம் தர மாணவர்களுக்கான பழ மரக்கன்றுகள் வழங்கும் தேசிய திட்டம். இன்று மட்டக்களப்பில் ஆரம்பம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்சவின் சுபீட்சத்தை நோக்கிய எதிர்காலம் எனும் கோட்பாட்டுக்கமையவும் வளமான நாடு சுகாதாரமான சுற்று சூழல் என்ற தொனிப்பொருளுக்கமையவும் புதிதாக தரம் 1 இல் கல்வி கற்க ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கும் ‘கெகுளு தரு உதான’ எனும் தேசிய திட்டம் நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் இத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்குரிய ஆரம்ப நிகழ்வு இன்று (15) சந்திவெளி சித்தி விநாயகர் கனிஸ்ட வித்தியாலயத்தில் மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தினதும் மாவட்ட செயலக விவசாய பிரிவினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில் இப் பழ மரக்கன்றுகளை தங்கள் வீடுகளிலே நட்டு சிறந்த முறையில் பராமரிப்பதன் மூலம் நாட்டை வளம் மிக்க நாடாக மாற்ற வேண்டும் எனவும் இப் பழ மரக்கன்றுகளை பெற்ற பிள்ளைகள் தரம் 5 இல் கல்வி கற்கும்போது இப் பழப்பயிர்களினூடாக உச்ச பயனைப் பெறவேண்டும் எனவும் இவ் விடயத்திலே பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலையில் பழ மரக்கன்றுகள் நடுகை செயற்பாடும் இடம்பெற்றது. தினமும் ஒவ்வொருவரும் 200 கிராம் பழங்களை உண்ண வேண்டும் என்ற கோட்பாட்டுக்கமைய இத் தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந், கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் ரீ. ரவி, கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகன்நாத், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதி பணிப்பாளர் வீ. பேரின்பராசா, விவசாய விரிவாக்கல் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ். சித்திரவேல், மாவட்ட செயலக விவசாய கிளை உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.