கரடு முரடான ஆடுகளத்தில் அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி அஷ்வின் சதம்.

சென்னை சேப்பாக்கம் 2-வது டெஸ்டில் கரடு முரடான ஆடுகளத்தில் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அஷ்வின் சதம் விளாசி அசத்தினார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 134 ரன்னில் சுருண்டது.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதால் இந்திய பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்சில் திணறினார்கள். ஒரு கட்டத்தில் இந்தியா 106 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.
7-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் அஷ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. விராட் கோலி அரைசதம் அடித்து 62 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அஷ்வின் அபாரமான விளையாடி 134 பந்தில் சதம் விளாசினார். இந்த ஜோடி 96 ரன்கள் சேர்த்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் அஷ்வினின் ஐந்தாவது சதம் இதுவாகும். கரடு முரடான ஆடுகளத்தில் நிலைத்து நின்று விளையாடுவதே பெரிய விஷயம். ஆனால் அஷ்வின் சதம் அடித்தது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.