குண்டு மழைக்குள் சிக்கிய ஊடகன் சத்தியமூர்த்தி : சண் தவராஜா
பொதுப் பணியிலே ஈடுபடுகின்ற பலரும் தாம் உயிரைக் கொடுத்துப் பணி செய்வதாகக் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். தாங்கள் கூறுவதைப் போன்று உயிரைக் கொடுத்தே ஆக வேண்டிய சூழல் உருவானால், “பணியாவது, மண்ணாங் கட்டியாவது. உயிரே பிரதானம்” என நினைத்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுபவர்களே அநேகர். எனினும், விதிவிலக்காக ஒரு சிலர் தமது பணியின் நிமித்தம் உயிரை ஈந்து மக்கள் மனதில் நிற்கிறார்கள். அத்தகைய ஒருவர் பற்றிப் பேசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
ஒரு சமூகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படுவது ஊடகத் துறை. இந்தத் துறையில் பணியாற்றுபவர்கள் ஆட்சியாளர்களின் நிரந்தர நண்பர்களாக எப்போதும் இருப்பதில்லை. ஜனநாயக அரசியலில் எவ்வாறு நிரந்தர நண்பர்களும், பகைவர்களும் இருப்பதில்லையோ அதேபோன்றே அரசியல்வாதிகளின் நிரந்தர நண்பர்களாக ஊடகர்களும் இருப்பதில்லை. மனச் சாட்சி உள்ள ஊடகர்களால் அவ்வாறு இருக்கவும் முடியாது.
நாகரிகத்தின் உச்சியில் உலகம் இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், ஊடகர்களுக்குப் பாதுகாப்பு அற்றதாகவே தற்கால உலகம் விளங்கி வருகின்றது. யுத்தச் சூழல் ஆயின் ஊடகர்களின் பாதுகாப்பு இரட்டிப்பு ஆபத்துக்கு ஆளாகின்றது. சில வேளைகளில், ஊடகர்கள் சாகசங்களைக் கூட நிகழ்த்த வேண்டி ஏற்படுகின்றது. தனிமனித சுகங்களைத் துறந்து பணி செய்யும் அவர்கள் பல வேளைகளி;ல் உயிரைக் கூடத் துறக்கும் நிலையும் உருவாகின்றது.
சிறி லங்காவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் காவு கொண்ட ஊடகவியலாளர்களுள் ஒருவர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி. போரின் ஈறுதிக் காலகட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் உள்ள தேவிபுரம் கிராமத்தில் இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலின் போது 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இவர் மரணத்தைத் தழுவிக் கொண்டார். அவர் இறப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்னர், இந்தப் பிரதேசத்தில் கொத்துக் குண்டுகள் வீசப்பட்டிருந்தன. இது பற்றிய செய்திகளை அவரும், அவரது சகாக்களும் உள்ளூர் மற்றும் வெளியூர் ஊடகங்களுக்குச் செய்திகளாகவும், காணொளிகளாகவும் வழங்கியிருந்தார்கள். இது பற்றிய மேலதிக செய்திகளைச் சேகரிப்பதற்காக தேவிபுரம் பகுதிக்குச் சென்ற போதே எங்கிருந்தோ வந்த எறிகணைக்கு அவர் பலியானார். அவர் நின்றிருந்த இடத்திலிருந்து நூறு மீற்றருக்கு அப்பாலேயே எறிகணை வீழ்ந்து வெடித்த போதிலும், அதிலிருந்து புறப்பட்ட ஒரு சிறு துண்டு அவரது இதயப் பகுதியைத் தாக்கியிருந்தது. மண்ணையும், மக்களையும் தன் இதயத்தில் வைத்து நேசித்த அவரது உயிர் அந்த இடத்திலேயே பிரிந்தது. அது மாத்திரமன்றி தான் மிகவும் விரும்பிய ஊடகப் பணியினை ஆற்றச் சென்றிருந்த வேளையிலேயே மரணத்தைத் தழுவிக் கொண்ட மாண்பையும் அவர் பெற்றுக் கொண்டார்.
சாதாரணமாக அனைத்து இளைஞர்களையும் போலவே சத்தியமூர்த்தியின் வாழ்வும் ஆரம்பமாகியது. பல்வேறு கனவுகளோடும், எதிர்பார்ப்புகளோடும் வாழ்க்கையை ஆரம்பித்த அந்த இளைஞனின் பெருவிருப்புக்குரிய ஒரு துறையாக ஊடகத் துறை அமைந்தது. இறுதியில், அதுவே அவனது வாழ்வின் முடிவுக்கும் காரணமாகிப் போனது.
மீசை அரும்பத் தொடங்கிய வயதில் கா.பொ.த. உயர்தரம் படிக்கும் போதே ஊடகத் துறையோடு ஊடாடத் தொடங்கியவன் சத்தியமூர்த்தி. யாழ்ப்பாணத்தின் இணுவில் கிராமத்தில் பிறந்து, பொலநறுவை மாவட்டத்தின் மன்னம்பிட்டியில் ஆரம்பக் கல்வியைக் கற்று, யாழ்ப்பாணத்தின் மண்டைதீவில் மேற்படிப்பைத் தொடர்ந்து, போர்ச் சூழல் காரணமாக வன்னியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட சத்தியமூர்த்தி விடுதலைப் புலிகளின் பொருண்மியப் பிரிவினால் வெளியிடப்பட்ட ஆதாரம் சஞ்சிகையில் முதன்முதலில் எழுதத் தொடங்கினான். 1992 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கியவன் 2009 இல் மரணத்தைத் தழுவும் வரை 17 ஆண்டுகளாக எழுதுவதை நிறுத்தவில்லை. இந்தக் காலகட்டத்தில் ஈழநாடு, ஈழ நாதம், புலிகளின் குரல், தரிசனம், வெளிச்சம், ரி.ரி.என்., ஐ.பி.சி. எனப் பல்வேறு ஊடக நிறுவனங்களிலும் பணியாற்றிய சத்தியமூர்த்தி, தான் பணியாற்றிய அனைத்து ஊடக நிறுவனங்களிலும் முத்திரை பதிக்கவும் தவறவில்லை.
எத்தனை பிரபலமானவராக இருந்தாலும், சொந்த வாழ்க்கைக்குப் போதுமான அளவு பொருள் ஈட்ட முடியாதவர்களாகவே பிராந்தியச் செய்தியாளர்கள் அன்று இருந்தார்கள். (இன்றும் அவ்வாறே உள்ளார்கள் என்பது தனிக் கதை.) தனது கல்வித் தகைமையைக் கொண்டு கல்வித் திணைக்களத்திலும், பின்னர் சுகாதாரத் திணைக்களத்திலும் முகாமைத்துவ உதவியாளராக உத்தியோகம் பார்த்துக் கொண்டே பகுதிநேர ஊடகவியலாளராகவே சத்தியமூர்த்தி செயற்பட்டார். ஆனால், ஒரு தொழின்முறை ஊடகரின் பணியை விடவும் அவர் அதிக பணியை ஆற்றினார் என்பதை அவரைத் தெரிந்தவர்கள் அறிவார்கள்.
யுத்த கால வன்னி வாழ்க்கை என்பது வசந்தமான வாழ்க்கை அல்ல. போதாமைகளும், துன்பங்களும் நிறைந்த வாழ்வு அது. அது மாத்திரமன்றி நிம்மதி இருந்தாலும் உயிர் அச்சம் நிழல் போலத் தொடர்ந்து கொண்டே இருந்த வாழ்க்கை அது. அந்த வாழ்க்கைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும் சத்தியமூர்த்தியும், அவரது காதல் மனைவியும் அந்த வாழ்க்கையை மனதார ஏற்றுக் கொண்டார்கள். வாழப் பழகிக் கொண்டார்கள். வலிகளைத் தாங்கிக் கொண்டார்கள்.
நோக்கம் ஒன்றே. எனது அயலவனுக்கு நேரும் துன்பம் எனக்குமானதே. எனது உறவினன் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை நானும் பகிர்ந்து கொள்ள வேண்டியவனே. இன்பமாகினும், துன்பமாகினும் – அது மரணமாகினும் – தாம் நேசித்த மண்ணில், தம்மை நேசித்த மண்ணில் நிகழ்வதாயின் அதனையும் மகிழ்வோடு ஏற்போம் என்பதே அந்த இணையரின் இலட்சியம் ஆனது.
மரணம் தவிர்க்க முடியாத நிகழ்வு எனத் தெரிந்தும் மனிதன் அதனை சதா நினைத்துக் கொண்டே வாழ்வதில்லை. ஆனால், இலங்கையில் அத்தகைய ஒரு வாழ்க்கையை – மரணத்தை சதா நினைத்த வண்ணம் வாழும் வாழ்க்கையை – வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட இலட்சக் கணக்கான மக்களுள் சத்தியமூர்த்தியின் குடும்பமும் ஒன்றாக இருந்தது. இறுதியில், இத்தகைய வாழ்க்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாமற்போன இலட்சக் கணக்கானோரில் சத்தியமூர்த்தியும் ஒருவராகிப் போனார்.
போர் தின்ற பல பத்துக் கணக்கான ஊடகர்களுள் சத்தியமூர்த்தியும் ஒருவர். எனினும் அவரது ஊடக சகாக்களின் மனதில் அவரது நினைவு உள்ளதா எனத் தெரியவில்லை. அவரது மரணம் நடைபெற்ற காலப் பகுதியில் உலகின் பல பகுதிகளில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளோடு அவரது நினைவு மறைந்துபோய் விட்டது. பத்து வருடங்களின் பின்னர் – புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் அவரது துணைவியாரின் முன்முயற்சியில் – ஒரு நினைவு தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பிரான்ஸ் நாட்டிலும், கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுகளின் பின்னணியில் சத்தியமூர்த்தியின் துணைவியாரே செயற்பட்டார்.
சத்தியமூர்த்தியின் மரணத்தை அவரது ஊடக சகாக்கள் ஆண்டு தோறும் நினைவு கூராமல் கடந்து போவதன் காரணம் எதுவாக இருக்க முடியும்? அவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்தார் என்பதாலா? அல்லது அவர் விடுதலைப் புலிகளின் ஊடகங்களிலும் பணியாற்றினார் என்பதாலா? அல்லது மக்களோடு மக்களாக நின்று, அவர்களின் சுக துக்கங்களில் நேரடியாகப் பங்கு கொண்டு செய்திகளை வழங்கினார் என்பதாலா?
சத்தியமூர்த்தி ஆயுதம் ஏந்திய போராளி அல்ல. அவர் ஓர் ஊடகப் போராளி மாத்திரமே. தான் வாழ்ந்த சூழலில் மக்கள் சந்தித்த அவலங்களை உலகறியச் செய்ய தனக்கு வாய்த்த ஊடகங்களைப் பயன்படுத்தினார். அதனை ஒரு அறம் சார்ந்த, சமூகக் கடமையென நினைத்துச் செயற்பட்டார். தனது மனச் சாட்சிக்கு ஒப்ப அவர் பணியாற்றினார். பணியின் போதே மரணத்தையும் தழுவிக் கொண்டார்.
எனது வாழ்நாளில் நான் சத்தியமூர்த்தியை என்றுமே நேரில் சந்தித்தில்லை. ஆனால், தொலைக் காட்சிகளில், வானொலிகளில் அவரது பேச்சுக்களைக் கேட்டு வியந்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். இறுதிப் போர்க் காலகட்டத்தில் வன்னியில் இருந்து ஊடக நண்பர் கஜனுடன் இணைந்து அவர் வழங்கிய ‘நாள் நோக்கு’ என்ற தலைப்பிலான தினசரிப் பத்திரிகைச் செய்திகள் பற்றிய பெட்டக நிகழ்ச்சி, தனியே செய்திகளை மட்டுமன்றி செய்திகளுக்கு அப்பாலான சங்கதிகளையும் பேசியது. அந்த நிகழ்ச்சியில் அவரது அறிவின் விசாலமும், ஆளுமைத் திறனும் பெரிதும் வெளிப்பட்டது.
ஆஸ்துமா நோயுடன் நீண்ட காலமாகப் போராடிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி செய்தி சேகரிக்கும் விடயத்தில் என்றுமே நோய்க்கு முன்னுரிமை தந்தவரல்ல. பனியோ, குளிரோ, மழையோ, வெயிலோ ஊடகப் பணிக்கு எதுவுமே தடையில்லை என வாழ்ந்தவர் அவர்.
அவரது நினைவுகள் வரும் போதெல்லாம் கன்னக் குழியுடன் கூடிய அவரின் சிரிப்பும், அவரது உடலத்தின் மீது அவரது மகள் முத்தமிடும் நிழற் படமுமே நினைவுக்கு வருகின்றன, கூடவே, இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு இன்றுவரை நீதி கிடைக்காமல் போன ஊடகர்களின் நினைவுகளும்.