சைலன்ட் மோடில் சசிகலா! அக்டிவ் மோடில் எடப்பாடி!
சிறை தண்டனை முடிந்து தமிழகத்திற்கு திரும்பி ஒரு வாரம் கடந்த நிலையிலும் அதிமுகவில் இருந்து ஒரு நிர்வாகி கூட தன்னை சந்திக்க வராதது சசிகலாவிற்கு கள நிலவரத்தை கடுமையாக உணர்த்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்னர் அதிமுக எனும் மிகப்பெரிய இயக்கமும், தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பும் சசிகலா வசம் தான் இருந்தது. முதலில் ஆட்சி கையை விட்டு சென்றது. பிறகு கட்சியும் சென்றுவிட்டது. ஆனால் தான் தமிழகம் திரும்பிய பிறகு ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை என்றாலும் கட்சியை கைப்பற்றி விடலாம் என்று சசிகலா கணக்கு போட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளையும் அவர் செய்திருந்தார். ஆனால் அவர் செய்த ஏற்பாடுகள் அனைத்தும் வீணானுதடன் எதிர்பாரத்த ரிசல்ட்டும் கிடைக்கவில்லை. சசிகலா தமிழகத்திற்கு வருவதற்கு முன்பு கூட ஆங்காங்கே அவருக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர்கள் சிலர் போஸ்டர் ஒட்டினர்.
ஆனால் சசிகலா தமிழகம் வந்த பிறகு இப்படி போஸ்டர் ஒட்டியவர்களும் மாயமாகினர். இதற்கு காரணம் சசிகலாவிற்கு அதிமுகவினர் மத்தியில் எவ்வித எதிர்பார்ப்பும், ஆதரவும் இல்லை என்பது கண்கூடாக தெரிந்தது தான் என்கிறார்கள். அத்தோடு சசிகலாவுடன் தொடர்பு கொள்வோரை தயவு தாட்சன்யம் பார்க்காமல் அதிமுக மேலிடம் கட்சியில் இருந்து நீக்கி வருகிறது. எனவே சசிகலாவை நம்பி அரசியல் வாழ்வில் ரிஸ்க் எடுக்க யாரும் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. இதே சசிகலா வந்த பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. சசிகலாவிற்கு எதிராக அவர் எதுவும் பேசவில்லை.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி மிக கடுமையாக பேசுகிறார். அடுத்த கட்டத்தில் சசிகலாவிற்கு எதிராகவும் சில கருத்துகளை எடப்பாடி பழனிசாமி பேசக்கூடும் என்கிறார்கள். இப்படி எடப்பாடியின் அதிரடி அரசியல் அதிமுகவினரை யோசிக்க வைத்துள்ளது. அத்தோடு எடப்பாடி பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று தான் தமிழகம் வந்ததாக பிரதமர் நரேந்திர மோடியே கூறியுள்ளார். இதன் மூலம் எடப்பாடி – மோடி இடையிலான உறவு சீராக இருப்பது தெரியவந்துள்ளது. இப்படி எடப்பாடி ஆட்சி, கட்சி, கூட்டணி என அனைத்தையும் சிறப்பாக டீல் செய்து வருவது அதிமுகவினரை யோசிக்க வைத்துள்ளது.
எனவே இப்போது தேவையில்லாமல் சசிகலாவை சந்திப்பது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இரண்டு தொகுதி இடைத்தேர்தல்களில் வென்றது, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்களை பெற்றது போன்றவையும் கட்சிக்காரர்களுக்கு மேலிடத்தால் அவ்வப்போது எடுத்துக்கூறப்படுகிறது. அதே சமயம் அமமுகவின் வாக்கு வங்கி உள்ளிட்டவை குறித்தும் கட்சிக்காரர்கள் தெரிந்து வைத்துள்ளனர். இப்படி அனைத்து விஷயங்களுமேஅதிமுகவில் எடப்பாடிக்கு சாதகமாகவே உள்ளது.
எனவே என்ன செய்வது என்று யோசிக்கலாம் என முடிவெடுத்துள்ள சசிகலா சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார். நிர்வாகிகள் ஆதரவு இல்லாமல் அதிமுகவை கைப்பற்ற முடியாது என்பது சசிகலாவிற்கு நன்றாக தெரியும். எனவே தான் அரசியல் ரீதியான செயல்பாடுகளை தற்போதைக்கு ஓரங்கட்டிவிட்டு தனிப்பட்ட செயல்பாடுகளில் இனி சசிகலா கவனம் செலுத்த உள்ளதாக கூறுகிறார்கள். அதுவும் அவர் தஞ்சைக்கு செல்ல உள்ளது முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணமாம், அதில் அரசியல் எதுவும் இருக்காது என்கிறார்கள்.