யாழ் சித்த மருத்துவ பீட வளாகத்தின் முன்பாக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சித்த மருத்துவ பீட பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமான திட்டங்களில், இத்துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, அரசோ பராமுகமாக உள்ளதனால், தங்களின் முதுநிலை பட்டதாரிகளின் இன்றைய அவலநிலை, தற்போதைய பயிலுனர் மாணவர்களின் எதிர்காலநிலை குறித்த அச்சம், வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறுமோ என்ற பயம், இவற்றையெல்லாம் தங்களுக்குள் அடக்கி மன அழுத்தங்களை உண்டு பண்ணாமல் அவலங்களை வெளிக் கொண்டு வந்து ஓர் நிரந்தர தீர்வை பெறும் நோக்கில் இன்று செவ்வாய்கிழமை (16) யாழ் சித்த மருத்துவ பீட வளாகத்தின் முன்பாக (கைதடி) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 வது அணியினர் இன்னும் வேலையற்ற நிலையில் உள்ளனர். அதன் பின் இன்னும் 5 அணியினர் பல்கலைகழகத்தில் பட்ட படிப்பில் உள்ளனர். தற்போது 36 வது அணியினர் தமது கல்வியை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் எமது எதிர்காலம் என்ன? என்ற நிலை அனைத்து தரப்பினரையும் மனவேதனைக்கு உள்ளாக்கி வருவது நியாயமானதே. குறைந்த கால பட்டப்படிப்பினை நிறைவு செய்யும் சகல துறையினருக்கும் வேலைவாய்ப்பு ஒழுங்குகளை சம்பந்தப்பட்ட அமைச்சும், அரசும் உறுதி செய்யும் நிலையில் 6 வருட கால பயிற்சியினை நிறைவு செய்யும் எமக்கு அதற்கான தீர்வினை இதுவரை நிர்ணயிக்காமல் உள்ளது யாரின் தவறு?
இதுவரை எம்மவர்கள் எதையும் கேட்கவில்லை, இதனால் நாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டே வருகின்றோம்.
இப்போதே நாம் எமது தரத்திற்கான வேலை வாய்ப்பினை உறுதி செய்யவில்லை என்றால் இன்னும் 5 வருடங்களில் யார் பதில் சொல்வது?
இவ்வாறான கேள்விகளினால் தங்களின் மனநிலை , மன அழுத்தம், கல்வியில் அக்கறையின்மை போன்ற காரணிகளை அரசுக்கும் துறைசார்ந்த அமைச்சுக்கும் உணர்த்தும் கவனயீர்ப்பு பேரணி பழைய மாணவர்களுடன் இணைந்து யாழ் சித்த மருத்துவ பீட வளாகத்தின் முன்பாக நடத்தப்பட்டது.
சகலரும் எமது நியாயமான கோரிக்கைகளுக்கு உதவுவதுடன்
அரசு எமது கோரிக்கைகளை நிறைவு செய்து விரைவாக செயற்பட சகல துறைசார்ந்த அதிகாரிகளையும் ஒத்துழைக்குமாறு கேட்கின்றோம்.
இவ்வாறு மாணவர்கள்,பழைய மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.