பா.ஜ.கவை இலங்கையில் வேரூன்ற அனுமதியோம்! – சஜித் அணியும் போர்க்கொடி
“இலங்கை என்பது சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் கொண்ட சுதந்திர நாடாகும். இங்கு இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியின் அதிகாரம் வேரூன்ற இடமளிப்பதென்பது, நாட்டின் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே, அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“இலங்கை என்பது சுயாதீனத்தன்மையும் இறையாண்மையும் கொண்ட சுதந்திரமான நாடாகும். அவற்றுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாதவாறான ஓர் அரசியலே நாட்டில் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறிருக்கையில் இந்தியாவின் ஆளுங்கட்சி அதன் கிளையொன்றை இலங்கையில் நிறுவுவதற்கு முயற்சிப்பதென்பது, எமது நாட்டின் சுயாதீன நிர்வாகத்தில் தேவையற்ற தலையீடுகள் ஏற்படுவதற்கு வழிவகுப்பதாகவே அமையும்.
திரிபுரா முதலமைச்சர் வெளியிட்டுள்ள கருத்தின் உண்மைத்தன்மை தொடர்பில் இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும், இலங்கை போன்ற சிறிய நாடுகளில் இந்தியா அதன் அதிகாரத்தையும் அரசியல் வலுவையும் விஸ்தரிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது தெளிவாகின்றது. இது குறித்து இந்தியாவின் பாரதிய ஜனதாக் கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னரே எமது நிலைப்பாட்டை முழுமையாக வெளிப்படுத்த முடியும்.
எனினும், இதுவரையில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் நோக்குகையில், திரிபுரா முதலமைச்சர் கூறியதைப் போன்ற நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதியளிக்கப்படக்கூடாது. அதனை அனுமதிப்பதால் உள்ளக விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும்” – என்றார்.