இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday)
இன்று திருநீற்றுப் புதன் (ASH Wednesday)
17.02.2021
உலகெங்கும் வாழும் கத்தோலிக்கர்களால் இன்று பெப்ரவரி 17 திருநீற்றுப் புதன் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் ஆரம்ப நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த திருநீற்றுப் புதன் விபூதிப் புதன், சாம்பல் புதன் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது.
இன்றைய நாளில் ஒரு சந்தியும் சுத்தபோசனமும் (மாமிச தவிர்ப்பு) அனுஷ்டிக்க கத்தோலிக்க திருச்சபை கட்டளையிட்டுள்ளது. சிறியவர்களும் நோயாளர்களும் முதியவர்களும் இந்தக் கட்டளையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
இப் புதனன்று முதல் நாம் தவக்காலத்திற்குள்; நுழைகிறோம். இதனைத் தொடர்ந்து வரும் 40 நாட்களும் நமது செப, தவ , ஒறுத்தல் முயற்சிகளுக்காக நமக்கு கொடுக்கப்பட்ட காலமாக கருதப்படுகின்றது.
தவக்காலம் வசந்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னதான காலமாக கருதப்படுகின்றது.
தமிழில் நாம் தவக்காலம் என்று அழைப்பதை, ஆங்கிலத்தில் Lent season என்று அழைக்கிறோம்.
Lenten (அல்லது, Lencten) என்ற வார்த்தை ஒரு Anglo Saxon வார்த்தை. அதன் பொருள் வசந்தம். வசந்த காலம், தவக்காலம் இரண்டையும் இணைப்பதே ஓர் அழகான எண்ணம். புதுமையான எண்ணம்.
வசந்த காலத்தை அனுபவிப்பதற்கு முன்னதாக நம்மில் பல மாற்றங்கள் நடைபெறவேண்டும். அதற்கான அர்ப்பண வாழ்வில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். அது நமக்கு கடினமானதாக இருக்கலாம். ஆனால் அந்த நாட்கள் நமக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன.
தவக்காலத்தில் நாம் கைக்கொள்ளும் நடைமுறை வாழ்க்கை முயற்சிகள் ஆன்மீக வழி நின்று நம்மை புதிய மனிதர்களாக மாற்றிக் கொள்வதற்கு நம்மை அழைத்துச் செல்கின்றது.
இந்த மனமாற்றங்களை நாம் எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றோம்?
நமது ஆசாபாசங்களை ஒறுத்து நம்மாலான தானதருமங்கள், உதவிகளை நம்மைச் சார்ந்தவர்களுக்கு செய்யலாம்.
சாம்பலிலிருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் Phoenix பறவையைப்பற்றி கேள்விபட்டிருக்கிறோம். இல்லையா? அந்தப் பறவையைத் தவக்காலத்தின் ஒரு அடையாளமாக நாம் சிந்திக்கலாம்.
திருநீற்றுப் புதனன்று நமது நெற்றியில் குருவானவரால் அடையாளப்படுத்தப்படும் சிலுவை அடையாளத்தின் போது குருவானவர் நமக்கு சொல்லும் வார்த்தைகளான மனிதா நீ மண்ணாயிருக்கிறாய். மண்ணுக்கே திரும்புவாய் என்ற அழைப்பு இவ்வுலக வாழ்வு நமக்கு நிலையற்றது என்பதை நினைவுறுத்துகின்றது.
ஆகவே இந்த உலகவாழ்வில் நாம் செய்யும் பணிகள் நம்மை இறைவன்பால் அழைத்துச் செல்ல உதவுகின்றன.
இயேசு சிலுவையில் கூறியதாய் சொல்லப்படும் ஏழு வாக்கியங்களை நம் தவக்காலத்தின் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்.
தந்தையே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை.” (லூக்கா 23:34)
தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளும் பல முயற்சிகளுக்கு, அடிப்படையாக நமக்குத் தேவையானது, மன்னிப்பு.
இந்தத் தவக்காலத்தை நாம் சரியான வழியில் பயன்படுத்தி நம்மில் மாற்றங்களை உருவாக்கி இறைவனுக்கேற்ற மனிதர்களாக நாம் வாழும் வகையில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வோம்.
– நிலா