காரைநகரில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
காரைநகரில் கடற்படையினருக்கு காணி
சுவீகரிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!
யாழ்.காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான காணியைக் கடற்படை முகாம் அமைக்கும் நோக்கில் அளவீடு செய்ய ஆயத்தமான வேளை அங்கு சென்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் பலத்த எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணியளவில் குறித்த காணி எலறா எனப்படுகின்ற கடற்படைத்தளத்துக்குக் கையகப்படுத்தும் நோக்கில் அளவீடு செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன.
அளவீடு செய்ய முற்பட்ட காணியானது தனியாருக்குச் சொந்தமானது. கடந்த 2012ஆம் ஆண்டளவில் காணி உரிமையாளரால் காரைநகர் இந்துக் கல்லூரியின் மைதானத்துக்கென அது வழங்கப்பட்டிருந்தது. எனினும், இற்றைவரை குறித்த காணியானது கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகின்றமையால் எவ்வித அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இந்தநிலையிலேயே குறித்த காணி இன்று காலை அளவீடு செய்யப்படவுள்ளது எனக் கிடைத்த தகவலையடுத்து அங்கு கூடியவர்கள் அளவீடு செய்ய வந்தவர்களுக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் குறித்த பகுதி பிரதேச செயலரையும் சந்தித்துக் கலந்துரையாடி அளவீடு செய்யும் நடவடிக்கைகளை அவர்கள் இடைநிறுத்தியுள்ளனர்.
குறித்த காணிக்குப் பதிலாக வேறு காணியை வழங்குவது தொடர்பில் அண்மையில் இடம்பெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது அதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இந்தக் காணி உட்பட ஏனைய தனியார் மற்றும் பொதுக்காணிகளைக் கடற்படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பது தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் மேற்படி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.