பெரிய தேசபக்தர்களை போன்று, பீஜேபி பிப்லப் டெப்பின் தலையை இங்கே சிலர் உருட்டுகிறார்கள்.
பெரிய தேசபக்தர்களை போன்று, பீஜேபி பிப்லப் டெப்பின் தலையை இங்கே சிலர் உருட்டுகிறார்கள்.மனோ கணேசன்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் திரிபுராவின் பீஜேபி முதல்வர் பிப்லப் டெப் நேபாளத்திலும், இலங்கையிலும், பீஜேபி கிளைகள் உருவாக்குவோம் என்ற மாதிரி சொன்னாராம் என இங்கே சிலர் சும்மா போட்டு குழப்பி கொள்கிறார்கள்.
நம் நாட்டின் உண்மை பிரச்சினைகளால் மக்கள் துவண்டு போய் இருப்பதை திசை திருப்ப இது இன்று பயன்படுகிறது.
சாதாரண பாமரருக்கும் தெரிந்த விடயம் பற்றி, அரசியல் சட்ட விற்பன்னர்கள், ஏதோ பெரிய அரசியல் சட்ட வியாக்கியானம் வேறு கொடுக்கின்றார்கள். இவை என்ன என எங்களுக்கு தெரியாதா?
இந்திய பிரதமர் மோடியின் தலைமையில் இந்நாட்டில் கட்சி அமைக்க முடியாது. இந்திய பீஜேபியின் நேரடி கிளையை இங்கே அமைக்க சட்டத்தில் இடமில்லை.
ஆனால் இங்கே ஒரு கட்சியை வேண்டுமானால், சட்டப்படி “பாரதீய ஜனதா கட்சி” (பீஜேபி) என பதிவு செய்ய விண்ணபிக்கலாம். அல்லது உள்ள ஒரு கட்சியின் பெயரைக்கூட பீஜேபி என மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கு சட்டம், கட்டம் போட முடியுமா, என்ன? இங்கே ஹெல உறுமய, ருஹுனு ஜனதா, தமிழ் முற்போக்கு, தமிழ் தேசிய, முஸ்லிம் காங்கிரஸ் என பல கட்சிகள் உள. இவை போன்று அதுவும் அமையலாம்.
உலகம் முழுக்க, இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய, ஆபிரிக்க, இலத்தின் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிஸ்ட், சோசலிஸ்ட் என்ற பெயரில் கட்சிகள் இல்லையா?
பல நாடுகளில் கிறிஸ்தவ ஜனநாயக கட்சி என்றும், கிரீன் பார்ட்டி என்றும் கட்சிகள் இருக்கின்றன. அதேபோல், இஸ்லாமிய என்ற பெயர் கொண்ட கட்சிகளும் உள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பிறகு இலங்கையின் ஆர்சி ஆண்டகை பேராயர் ரஞ்சித் மெல்கம் அவர்கள் “இலங்கை கிறிஸ்தவ ஜனநாயக கட்சி” என்று ஒரு கட்சி அமைக்க போகின்றாரோ என்ற கதை அடிப்பட்டது. அந்தளவுக்கு அவரது உரைகளில் அரசியல் இருந்தது.
இன்னமும் சில கட்சிகள் பெயரளவில் ஒரு அடிப்படையில் இல்லாவிட்டாலும் கூட, கொள்கை அடிப்படையில், உலகமட்ட ஒருமைபாடுகளை கொண்டுள்ளன.
நம்ம ஜேவீபீ, பல உலக புரட்சி இயக்கங்களுடன் ஒருமைபாடு கொண்டிருந்தது. இப்போது கூட அவர்களது மாநாடுகளுக்கு வேறு நாடுகளின் பல கட்சி பிரதிநிதிகள் வருகிறார்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, சுதந்திர கட்சி மாநாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் வருகின்றார்கள். நம்ம ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிகழ்வுகளில் இந்திய முஸ்லிம் லீக் பிரதிநிதிகளை கண்டுள்ளேன்.
ஆக இதெல்லாம், பெரிய டீல் அல்ல. சின்ன, சின்ன அரசியல் டீல்கள்தான்…!
பிப்லப் டெப், ஒரு துடிப்பான இளம் பீஜேபி அரசியலர். எதிர்கால இந்தியாவின் ஒரு முன்னணி தலைவராக வரக்கூடியவர். இன்று கொஞ்சம் அதிகமாக பேசி விட்டார், அவ்வளவுதான். இப்போ அவரை அழைத்து பிரதமர் மோடி விளக்கம் கேட்டுள்ளார்.
இதை பிடித்துக்கொண்டு இங்கே சிலர் பெரிய யோக்கியர்கள், உலக மகா உத்தமர்கள் போன்று பெரிய கட்டு கட்டுகிறார்கள். இவர்களை பற்றி எனக்கு தெரியாதா ?
போர்த்துகீசியர், ஒல்லாந்தரால் கைப்பற்ற முடியாமல் போன கண்டி ராஜ்யத்தை, ஆங்கிலேயர் எப்படி கைப்பற்றினார்கள்?
கண்டியின் கடைசி வீர தமிழ் மன்னன் கண்ணுசாமி நாயக்கர் என்ற ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கனை காட்டிக்கொடுத்து, போட்டுக்கொடுத்து தேசத்துரோகம் செய்த, பிலிமத்தலாவை, எகலபொல நிலமே ஆகியோர் யார் என்பதை தேடி பார்த்தாலே விடை கிடைக்கும்.
மேடையில் ஏறி தேசப்பற்றும், தமிழ், முஸ்லிம் இலங்கையருக்கு எதிராக இனவாதமும் பேசிவிட்டு, கீழே இறங்கி வந்து இரகசியமாக சீனாவுக்கோ, வெளிநாடுகளுக்கோ நாட்டை விற்று பிழைப்பு நடத்தும் பிலிமத்தலாவை, எகலபொல போன்ற நபர்கள் இந்நாட்டில் இன்றும் இருக்கிறார்கள்.
இதை மனதில் கொண்டு நாம் இலங்கையர்களாக உள்நாட்டில் ஒற்றுமையாக இருந்தால், எவரும் எம்மை ஆக்கிரமிக்க முடியாது, இல்லாவிட்டால் அதோகதிதான் என்பதை உணர்வோம்.