ஜனாஸா விவகாரத்தில் இலங்கையின் பின்வாங்கல் ஏமாற்றம் அளிக்கின்றது! அமெரிக்கத் தூதுவர் கவலை.
ஜனாஸா விவகாரத்தில் இலங்கையின்
பின்வாங்கல் ஏமாற்றம் அளிக்கின்றது!
அமெரிக்கத் தூதுவர் கவலை.
இலங்கையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிக்கும் பாரபட்சமான கொள்கையை முடிவுக்குக் கொண்டு வருவதில் இருந்து அரசும் பிரதமரும் பின்வாங்குவது ஏமாற்றமளிக்கின்றது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக அரசு ஒன்றிடமிருந்து மக்கள் (அண்மையில் உயிரிழந்தவர்கள் உட்பட) அவர்களின் உரிமைகள் தொடர்பில் இதனைவிட கூடுதல் மரியாதையைப் பெற உரித்துடையவர்கள் எனவும் தூதுவர் டெப்லிட்ஸ் இன்று பதிவிட்டுள்எ ருவிட்டர் தகவலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்களை புதைக்க அனுமதி அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
அப்போது அந்தக் கருத்தை வரவேற்று, அமெரிக்கத் தூதுவர் ருவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
எனினும், இந்த விவகாரத்தில் சுகாதார நிபுணர்களின் கருத்தை மீறி நடவடிக்கை எடுக்க முடியாது என்று அரசு ஓரிரு நாட்களிலேயே அறிவித்து விட்டது.
இந்தநிலையிலேயே, அரசின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளார் என்று அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.