புதிய அரசமைப்பு வெளியான பின்பே மாகாண சபைத் தேர்தல்.
புதிய அரசமைப்பு வெளியான பின்பே மாகாண சபைத் தேர்தல்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் இவ்வருடத்துக்குள் நடைபெறும் என முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்துவது குறித்து அரச உயர்மட்டம் பரீசிலித்து வருகின்றது.
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம், கிழக்கு முனையம் உட்பட மேலும் சில விடயங்களால் அரசு மீது சிங்கள தேசியவாத அமைப்புகள் கடும் அதிருப்தியில் உள்ளன. அதுமட்டுமல்ல மாகாண சபை முறைமை அவசியமில்லை எனவும் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்தால் அது அரசுக்குப் பெரும் பின்னடைவாக அமையும் எனவும், வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் அரச கூட்டணிக்குள் பிளவுகளை ஏற்படுத்தலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவேதான் புதிய அரசமைப்பு இயற்றப்பட்ட பின்னர் அதன் பிரகாரம் தேர்தலை நடத்தலாம் என்ற ஆலோசனை உயர்மட்ட ஆலோசகர் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வரைவு நகல் எதிர்வரும் மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. அதன்பின்னர் இதர பணிகள் இடம்பெற்று டிசம்பர் மாதத்துக்குள் புதிய அரசமைப்பு நடைமுறைக்கு வரும் என நம்பப்படுகின்றது. ஆக 2022ஆம் ஆண்டில்தான் மாகாண சபைத் தேர்தலுக்குச் சாத்தியம் இருக்கின்றது என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.