காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பு: மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!

காரைநகரில் கடற்படை முகாமுக்கு காணி சுவீகரிப்பு:மக்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்!
யாழ்.காரைநகர் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைக் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்குக் கையகப்படுத்தும் நோக்கில் நில அளவைத் திணைக்கள்தினரால் மேற்கொள்ளவிருந்த அளவீட்டு நடவடிக்கைகள் குறித்த பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள், காணி உரிமையாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்பினர் ஆகியோரின் கடுமையான எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்டது.
காரைநகர் ஜே.45 பிரிவுக்குட்பட்ட நீலங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள 51 ஏக்கர் அளவுடைய 61 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் ‘எலறா’ என்கின்ற கடற்படை முகாமுக்கு வழங்குவதற்காக இன்று காலை 9.30 மணிக்கு அளவீடு செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் எனப் பலர் குறித்த பகுதியில் இன்று காலை ஒன்றுகூடினர்.
இந்நிலையில், காணி அளவீடு செய்வதற்காகக் குறித்த பகுதிக்கு வந்த நில அளவை உத்தியோகத்தர்கள், “நாங்கள் அரச உத்தியோகஸ்தர்கள். உள்ளே தனியார் காணிகளுடன் சேர்த்து கடற்படையினருக்குச் சொந்தமான காணிகளும் உள்ளன. ஆகவே, அரசின் பணிப்பின் பேரில் அளவீடு செய்ய வேண்டியது எமது கடமை” என்று தெரிவித்தனர்.
எனினும், அங்கு கூடியவர்கள் ஓரணியில் நின்று கடும் எதிர்ப்பைக் காட்டினர்.
இதையடுத்து, “நீங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றமையால் உணர்வுகளை மதிக்கின்றோம்” என்று தெரிவித்த நில அளவை உத்தியோகத்தர்கள், காணி உரிமையாளர்களிடம் இருந்து எழுத்து மூலமான கடிதம் ஒன்றைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றனர். இதனால் இன்று காணி அளவீடு செய்யப்படவிருந்த நடவடிக்கை இடைநிறுத்தபட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அரசியல் பிரதிநிதிகள்,
“தொடர்ந்து இவ்வாறான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதற்கு அரசினுடைய பிரதிநிதிகளாகக் காணப்படுகின்ற ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையாக உள்ளனர். ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் காணி சுவீகரிப்புத் தொடர்பில் பேசி முடிவுகளை எடுத்திருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றிருக்காது. அரசிடம் நாம் கேட்டுக்கொள்ள விரும்புவது மக்களைத் தொடர்ந்தும் பாதிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடாமல் இந்தக் காணிகளை உரியவர்களிடம் கையளிக்க வேண்டும்” – என்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பகுதியில் கடற்படையினரின் தேவைக்கென பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காரைநகர் இந்துக் கல்லூரிக்குச் சொந்தமான 8 பரப்புக் காணி சில நாள்களுக்கு முன்னர் அளவீடு செய்யும் நோக்கில் வந்திருந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளின் பலத்த எதிர்ப்பால் திருப்பியனுப்பப்பட்டனர்.
இந்நிலையிலே இன்று குறித்த நீலங்காடுப் பகுதியில் மேற்கொள்ளவிருந்த அளவீடும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதி பலரும் வாழ்வாதாரமாக மீன்பிடியை மேற்கொள்ளும் இடம் என்றும், கடற்படையினரின் ஆதிக்கத்தால் பல வருடங்களாக மீன்பிடி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறித்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.