ஊடகவியலாளர்களுக்கு மிக விரைவில் கொரோனாத் தடுப்பூசி!
ஊடகவியலாளர்களுக்கு மிக விரைவில் கொரோனாத் தடுப்பூசி!
ஊடகவியலாளர்களுக்கும் மிக விரைவாக கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குமாறு வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளரால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்ற கடமைகளின் தன்மையைப் பொறுத்து அவர்கள் பல்வேறு ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்குத் தகவல்களை வழங்குவதில் தமக்கு ஏற்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது செயற்படுவதால் வெகுஜன ஊடக அமைச்சுக்குட்பட்ட சகல நிறுவனங்களினதும் ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் தடுப்பூசியை வழங்குமாறு அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.
வெகுஜன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் ஆலோசனைக்கமைய, அமைச்சின் செயலாளர் இந்தக் கோரிக்கையை சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முன்வைத்துள்ளார்.
அத்துடன் இதற்கு முன்னரும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான தேசிய பணிக் குழுவுக்கு இந்தத் தடுப்பூசியை வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும், பல ஊடக அமைப்புக்கள் மற்றும் ஊடக நிறுவனங்களில் நிலவும் சூழ்நிலைக்கமைய ஊடகவியலாளர்களுக்குத் தடுப்பூசியை வழங்குமாறும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன.
இதேவேளை, பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள், கடிதங்கள் மற்றும் பொதிகள் என்பவற்றை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்காக உதவும் தபால் சேவை ஊழியர்களுக்கும் இந்த ஆபத்தான நிலைமை இருப்பதால், இவர்களுக்கும் கொரோனாத் தடுப்பூசியை வழங்குமாறு வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.