ஐ.பி.எல். போட்டியால் இலங்கையுடான டெஸ்ட் தொடரை தவிர்த்த ஷாகிப்.
ஐ.பி.எல். போட்டியால் இலங்கையுடான டெஸ்ட் தொடரை தவிர்த்த ஷாகிப்.
2021 ஐ.பி.எல். தொடரில் கவனம் செலுத்தியுள்ளதனால் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷாகிப் அல் ஹசன், ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள இலங்கையுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தவிர்த்துள்ளார் .
பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் வியாழக்கிழமை( பிப்ரவரி 18 ) கிரிக்பஸுக்கு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் .
எனினும் இலங்கையுடனான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷாகிப் பங்கெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .
ஒரு வருட தடைக்கு பின்னர் வியாழக்கிழமை நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலத்தில் ஷாகிப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 3.2 கோடி இந்திய ரூபாவுக்கு விலைபோயுள்ளார்.
ஷாகிப் முன்னர் 2011 மற்றும் 2017 க்கு இடையில் நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் .
மேலும் 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபோது அணிக்காக தனது பங்களிப்பினையும் வழங்கினார் .
ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க விரும்புவதால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தவிர்க்கும்படி அவர் ( ஷாகிப் ) சமீபத்தில் எங்களுக்கு ஒரு கடிதம் கொடுத்துள்ளார் என்று அக்ரம் கிரிக்பஸிடம் கூறினார் .
விளையாட விருப்பமில்லாத ஒருவரை ( தேசிய அணிக்கான டெஸ்ட் ) போட்டியில் களமிறங்க வைப்பதில் அர்த்தமில்லை என்பதனால் நாங்கள் அவருக்கு ஐ.பி.எல்.லில் கவனம் செலுத்த அனுமதி வழங்கினோம் என்றும் அக்ரம் மேலும் தெரிவித்தார் .