பயங்கரவாத பயிற்சி பெற்றதாக 24 வயது பெண் கைது.
பயங்கரவாத பயிற்சி பெற்றதாக 24 வயது பெண் கைது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியென நம்பப்படும் ஸஹ்ரான் ஹாஷிமிடம் பயங்கரவாத பயிற்சி பெற்றதாக தெரிவித்து, மாவனல்லை, ஹிங்குல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றையதினம் (19) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் (PTA) அவரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கான உத்தரவைப் பெற்றுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஸஹ்ரான், ஒரு சில பெண்களை இணைத்து, தீவிரவாத மற்றும் வஹாபிசம் தொடர்பான வகுப்புகளை நடாத்தியதாக விசாரணைகளிலிருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய, குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த பெண்ணின் சகோதரர்கள் மூவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மாவனல்லை புத்தர் சிலை தகர்க்கப்பட்டமை தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வாறு ஸஹ்ரானிடம் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் மேலும் 06 பெண்கள் கடந்த டிசம்பர் 07ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தீவிரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.