போர் காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க அரசாங்கம் தயாராக உள்ளது – தினேஷ்
கடந்த போர் காலத்தில் மனிதாபிமான நடவடிக்கையின் போது ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இருந்திருந்தால் அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க அரசாங்கம் தயார் எனவும், அதற்காக ஏற்கனவே உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட 30/1தீர்மானத்திற்கு அந்த அரசாங்கம் இணை உதவி செய்ய ஒப்புக் கொண்டாலும், அதற்காக இலங்கை அரசியலமைப்பில் எந்தவிதமான ஏற்பாடுகளும் இல்லை எனவும் அதனால் தமது அரசாங்கம் இணை அனுசரணையிலிருந்து விலகியதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், போரின் போது ஏதேனும் மனித உரிமை மீறல்கள் இருந்தனவா என்பதைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் குற்றவாளிகளைத் தண்டிக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்ளவும், சர்வதேச சமூகத்துடன் நல்லெண்ணத்தை பேணவும் அரசாங்கம் தயாராக உள்ளது என்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள அடிப்படை நோக்கங்கள் மனித உரிமைகள் அமர்வில் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.