மோடியின் பதிலுக்காகக் காத்திருக்கின்றது இலங்கை!
மோடியின் பதிலுக்காகக் காத்திருக்கின்றது இலங்கை!
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வில் தமக்கு ஆதரவாக நாடுகளை அணி திரட்டும் முயற்சியில் இலங்கை முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றது.
இது தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒரு சிறப்புக் கோரிக்கையை முன்வைத்துள்ள இலங்கை, அவரின் பதிலுக்காகக் காத்திருக்கின்றது என இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்கும் என நம்புவதாகவும் ஜயநாத் கொலம்பகே தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் கூறியுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஒப்பந்தத்திலிருந்து இலங்கை விலகிக்கொண்டதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என அவதானிகள் கருதுகின்றனர்.
அத்தோடு வட – இலங்கையில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள எரிசக்தித் திட்டங்கள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கை எனவும் இந்தியா கருதுகின்றது.
இந்நிலையில், ஐநாவில் இலங்கைக்கு ஆதரவளிக்கும் கோரிக்கைக்கு இந்தியா எத்தகைய பதிலை வழங்கும் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைக்க ஐந்து (Core Group) நாடுகள் தயாராகி வருகின்றன.
இதேவேளை, ஜெனிவாவில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இம்முறையும் இலங்கைக்குக் கிடைக்கும் என்று வெளி விவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.