பயணிகள் விமானத்தின் ஒரு என்ஜின் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் டென்வரில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தின் ஒரு என்ஜின் தீப்பிடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து சனிக்கிழமை மதியம் ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு என்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது.

நிலைமையை விளக்கிக் கூறி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

எனினும் வரும் வழியிலேயே விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன. இதனால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது. விமானம் டென்வர் வரை செல்லுமா என்ற அச்சமும் ஏற்பட்டது.

எனினும் பதற்றப்படாமல் சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட், விமானத்தை டென்வர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். என்ஜினில் பற்றிய தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

விமான என்ஜினில் தீப்பிடித்தபோது எடுத்த வீடியோ மற்றும் உடைந்த பாகங்கள் குடியிருப்பு பகுதியில் விழுந்து கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.