மணிவண்ணன் ஆதாரமற்ற குற்றச்சாட்டு! – ஆனோல்ட் மறுப்பு.
மணிவண்ணன் ஆதாரமற்ற குற்றச்சாட்டு! – ஆனோல்ட் மறுப்பு.
இதேவேளை, இந்திய அரசின் நிதியுதவியில் யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை இலங்கை மத்திய அரசிடம் கையளிப்பதற்கு இணங்கியதன் காரணமாகவே அந்தக் கட்டடத்தை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என யாழ். மாநகர சபையின் இந்நாள் மேயர் வி.மணிவண்ணன் அரசியல் நோக்கத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் என முன்னாள் மேயர் இ.ஆனோல்ட் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ்ப்பாணக் கலாசார மத்திய நிலையத்தை பொறுப்பேற்பதற்காக நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டோம்.
கலாசார நிலையத்தை இயக்குவதற்கான உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கான அனுமதிக்காக பிரதமரை நேரில் சந்தித்து உரையாடவும், நிர்வாக ரீதியில் அனுமதி கோரியிருந்தோம். அதற்கான அனுமதி கிடைத்து உரையாடவுள்ள விடயங்கள் தொடர்பில் பட்டியல் கோரப்பட்டபோது இந்த விடயமே முதன்மைப்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டது.
நான் மாநகர மேயராகப் பதவியிலிருந்த காலத்தில் இதனைத் திறக்க முயன்றும், கொரோனா வைரஸ் தொற்று அச்சநிலை காரணமாக பணிகள் தடைப்பட்ட காலத்தில் சிலர் இதனை இலங்கை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல முயல்வதாக அறிந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், இந்தியத் தூதுவரை கொழும்பில் சந்தித்து கலாசார மத்திய நிலையத்தை உடன் திறக்கவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இதனைத் திறந்து வைக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்திருந்தோம்.
இந்தக் காலத்தில் இலங்கையில் இருந்து இந்தியா சென்ற அமைச்சர் குழாமில் இருந்த ஓர் அமைச்சரே இதனை மாநகர சபை நிர்வகிக்க மாட்டாது என்பதால் எம்மிடம் கையளியுங்கள் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனை இந்நாள் மேயரின் பங்காளிக் கட்சியின் தலைவர் மூலம் உறுதி செய்ய முடியும். ஏனெனில் அவரும் அந்த அமைச்சர் குழாமில் அங்கம் வகித்திருந்தார்.
இந்த விடயங்களை கூட்டமைப்பு சார் மாநகர சபை உறுப்பினர், அப்போதய மாநகர சபையில் பிரஸ்தாபித்தபோதும் கலாசார மண்டபத்தை மத்திய அரசிடம் கையளிக்க முடியாது எனச் சபையிலேயே தெரிவித்திருந்தேன்.
இந்தக் காலத்தில் சபையில் இருந்திருக்காத இந்தாள் மேயர், அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைக்கக் கூடாது.
இந்தக் கட்டடம் அமைக்கப்படும் காலத்தில் இந்தியா என்றாலே றோ எனக்கூறி ஓடி ஒளித்து, அவர்களிடம் பெறும் உதவியையே மறுத்தவர்கள் இவர்கள்.
இது மட்டுமல்ல யாழ். மாநகர சபையின் புதிய கட்டடத்துக்கு முதலில் ஆயிரத்து 800 மில்லியன் ரூபா திட்டமிடப்பட்டபோதே 300 மில்லியன் ரூபா சபை நிதியில் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஆனால், பின்னர் 2 ஆயிரத்து 150 மில்லியன் ரூபா செலவாக அதிகரித்தபோதும், சபையின் எந்த நிதியும் இன்றி அமைப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்தோம்.
இதன் ஆரம்ப நிகழ்வின் செலவுக்கு வெறும் 10 மில்லியன் ரூபா அனுமதி கோரியபோது இந்தக் கட்டடம் அமைக்கப்படமாட்டாது. அதனால், இந்த அனுமதியை வழங்க முடியாது எனக் கூறியவர்கள் இன்றைய ஆட்சியில் உள்ள இரு பங்காளிக் கட்சிகள்தான்.
ஆனால், இந்தக் கட்டடம் வராது விட்டால் எனது சொந்தப்பணத்தில் வழங்கத் தயார் என எமது கட்சி உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஓர் உறுப்பினரும் கூறியதன் பேரிலேயே அது அன்று அனுமதிக்கப்பட்டது.
இவை எதுவுமே அறியாது மேயராக வந்த பின்பு ஓடிப்போய் அந்தக் கட்டடத்தைப் பார்த்து வழிநடத்துகின்றனராம். இதுதான் அநாகரிக அரசியல்” என்றார்.