சுமந்திரன் எம்.பியிடமும் பொலிஸார் வாக்குமூலம்.
சுமந்திரன் எம்.பியிடமும் பொலிஸார் வாக்குமூலம்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையில் முன்னெடுக்கப்பட்ட நீதிக்கான பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
இன்று முற்பகல் கொழும்பிலுள்ள தனது இல்லத்துக்கு வந்த பொலிஸார் தன்னிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர் என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பாகவே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையில் அந்தப் பேரணி நடத்தப்பட்டிருந்தது. இந்தப் பேரணியின்போது வடக்கு, கிழக்கில் பல இடங்களில் பொலிஸார் நீதிமன்றங்களின் ஊடாக தடை உத்தரவைப் பெற்றிருந்தனர்.
எனினும், திட்டமிட்டவாறு பேரணி பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடத்தப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதன்படி இன்று எம்.ஏ.சுமந்திரன் எம்.பியிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன், எஸ்.வினோநோகராதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் யாழ். மாநகர சபை மேயர் வி.மணிவண்ணன் ஆகியோரிடம் ஏற்கனவே பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.